பாங்காக்: மகளிருக்கான ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி சுற்றில் இந்தியா ‘ஏ’ - இலங்கை ‘ஏ’ அணிகள் நேற்று மோதின. முதலில் பேட் செய்த இலங்கை ‘ஏ’ அணி 19.4 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக சஞ்ஜனா கவின்தி 31, ஷஷினி கிம்ஹானி 22, சத்யா சந்தீப்பானி 15, ஹன்சிமா கருணரத்னே 14 ரன்கள் சேர்த்தனர். இந்தியா ‘ஏ’ அணி தரப்பில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான கேப்டன் ராதா யாதவ் 3.4 ஓவர்களை வீசி 19 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
பிரேமா ராவத், தனுஜா கன்வர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 119 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்தியா ‘ஏ’ அணி 13.3 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தினேஷ் விருந்தா 20 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் விளாசினார்.
ராதா யாதவ் 18 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 31 ரன்களும், அனுஷ்கா சர்மா 27, நந்தினி காஷ்யப் 13 ரன்களும் சேர்த்தனர். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா ‘ஏ’ அணி இறுதிப் போட்டிக்கு முனனேறியது. இறுதிப் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி, வங்கதேச ‘ஏ’ அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. வங்கதேச ‘ஏ’ அணி அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் ‘ஏ’ அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச ‘ஏ’ அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஃபஹிமா கதுன் 40 ரன்கள் எடுத்தார். 111 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் ‘ஏ’ அணி 16.4 ஓவர்களில் 56 ரன்களுக்கு சுருண்டது.