புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 53, கேப்டன் ரியான் பராக் 51, வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்கள் சேர்த்தனர்.ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி 14 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் குவித்து வலுவாக இருந்தது. இதனால் அந்த அணி 220 முதல் 240 ரன்களை எளிதாக குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி 6 ஓவர்களில் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டு 5 விக்கெட்களை வீழ்த்தியதுடன் வெறும் 33 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர். இதில் 15-வது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களை மட்டும் வழங்கி 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அடுத்த ஓவரில் அக் ஷர் படேல் 5 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 17-வது ஓவரில் திவாரி 3 ரன்களை மட்டும் வழங்கி ஷுபம் துபேவை வெளியேற்றினார்.
18-வது ஓவரில் லுங்கி நிகிடி 8 ரன்களை வழங்கினார். அடுத்த ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் 6 ரன்களை கொடுத்த நிலையில் தசன் ஷனகாவை அவுட்டாக்கினார். கடைசி ஓவரை வீசிய லுங்கி நிகிடி 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து துருவ் ஜூரெல் விக்கெட்டை சாய்த்தார். ஒட்டுமொத்தமாக மிட்செல் ஸ்டார்க் 4, லுங்கி நிகிடி 2, மாதவ் திவாரி 2 விக்கெட்களை வீழ்த்தினர். 194 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அபிஷேக் போரெல் 51, கே.எல்.ராகுல் 56 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் விளாசி அசத்தியது. டெல்லி அணிக்கு 6-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. தற்போதைய வெற்றியின் மூலம் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு மெல்லிய வாய்ப்பை பெற்றுள்ளது.
அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் வரும் 24-ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்யும். இது நிகழ்ந்தாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்து டெல்லி அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தெரிய வரும்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக் ஷர் படேல் கூறியதாவது: நாங்கள் நடு ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி மீண்டு வந்தோம். கடைசி ஆறு ஓவர்களில் எங்களது பந்துவீச்சு அசாத்தியமான தரத்தில் இருந்தது. எங்கள் பந்துவீச்சு கூட்டணி விட்டுக்கொடுக்காத மனப்பான்மையுடன் செயல்பட்டது. மிட்செல் ஸ்டார்க் அற்புதமாக செயல்பட்டார்.
சொந்த மண்ணில் வெற்றி பெறுவது எப்போதுமே தனிச்சிறப்புதான். நாங்கள் ஒரு விஷயத்தில் மேம்பட்டுள்ளோம். இதற்கு முன்பு நாங்கள் கொத்தாக விக்கெட்டுகளை இழந்து வந்தோம். ஆனால் இந்த ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் அற்புதமாக செயல்பட்டனர். அது மற்ற பேட்டர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. இவ்வாறு அக் ஷர் படேல் கூறினார்.