சென்னை சூப்​பர் கிங்ஸ் அணிக்கு ஏமாற்​றம்: பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறியது ஹைதராபாத்

குஜராத் அணியும் தகுதி பெற்று அசத்தல்
சென்னை சூப்​பர் கிங்ஸ் அணிக்கு ஏமாற்​றம்: பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறியது ஹைதராபாத்
Updated on
5 min read

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் எம்.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி​கள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் பேட்​டிங்கை தேர்வு செய்தார். பேட்​டிங்கை தொடங்​கிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்​சன் சிறப்​பான தொடக்​கம் கொடுத்​தார்.

முதல் ஓவரின் முதல் பந்தை நித்​திஷ் குமார் ரெட்டி நோ-​பாலாக வீசி​னார். இதற்கு மாற்​றாக வீசப்​பட்ட பந்தை மிட் ஆன் திசை​யில் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார் சஞ்சு சாம்​சன். தொடர்ந்து அடுத்த பந்தை லெக் திசை​யில் பவுண்​டரி அடித்த சஞ்சு சாம்​சன் கடைசி பந்​தை​யும் பவுண்​டரிக்கு விரட்​டி​னார். இந்த ஓவரில் 17 ரன்​கள் விளாசப்​பட்​டது.

பிரஃபுல் ஹிங்கே வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்​சன் தொடர்ச்சியாக 3 பவுண்​டரி​களை விரட்டி அசத்​தி​னார். சிறப்​பாக பேட் செய்து வந்த சஞ்சு சாம்​சன் 13 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 27 ரன்​கள் விளாசிய நிலை​யில் பாட் கம்​மின்ஸ் பந்​தில் விக்​கெட் கீப்​பர் இஷான் கிஷனிடம் பிடி​கொடுத்து ஆட்டமிழந்​தார். அப்​போது ஸ்கோர் 2.3 ஓவர்​களில் 31 ஆக இருந்தது.

இதையடுத்து களமிறங்​கிய உர்​வில் படேல் இதே ஓவரின் கடைசி 2 பந்​துகளை​யும் சிக்​ஸருக்கு விளாசி​னார். 4-வது ஓவரை வீசிய இஷான் மலிங்கா 3 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​தார். அதிரடி​யாக விளை​யாட முயன்ற உர்​வில் படேல் 8 பந்​துகளில், 2 சிக்​ஸர்​களு​டன் 13 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஷகிப் ஹுசைன் வீசிய வேகம் (116.7 கிலோ மீட்​டர்) குறைந்த ஆஃப் கட்​டர் பந்​தில் போல்​டா​னார்.

இதன் பின்​னர் கார்த்​திக் சர்மா களமிறங்க பவர்​பிளே​வில் சிஎஸ்கே அணி 57 ரன்​கள் சேர்த்​தது. பிரஃபுல் ஹிங்கே வீசிய 8-வது ஓவரை கார்த்​திக் சர்மா பதம் பார்த்​தார். இந்த ஓவரின் முதல் பந்தை கவர் திசை​யில் பவுண்​டரிக்கு விரட்​டிய கார்த்​திக் சர்மா அடுத்த பந்தை ஸ்கொயர் லெக் திசை​யில் சிக்​ஸருக்கு பறக்​க​விட்டார். தொடர்ந்து அடுத்த பந்தை விக்​கெட் கீப்​பரின் பின்​புறம் பவுண்​டரி அடித்து அசத்​தி​னார் கார்த்​திக் சர்​மா. இந்த ஓவரில் 16 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது.

இதையடுத்து ஷிவாங்க் குமார் வீசிய 9-வது ஓவரின் முதல் பந்தை கார்த்​திக் சர்மா சிக்​ஸருக்கு விளாசி​னார். அதிரடி​யாக விளையாடிய கார்த்​திக் சர்மா 19 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 32 ரன்​கள் விளாசிய நிலை​யில் பாட் கம்​மின்ஸ் பந்தை கவர் திசை​யில் விளாசிய போது நித்​திஷ் குமார் ரெட்டியிடம் கேட்ச் ஆனது.3-வது விக்​கெட்​டுக்கு கார்த்​திக் சர்​மா, ருது​ராஜ் கெய்க்​வாட் ஜோடி 42 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து டெவால்ட் பிரே​விஸ் களமிறங்​கி​னார்.

10 ஓவர்​களில் சிஎஸ்கே அணி 91 ரன்​கள் சேர்த்​தது. ஷகிப் ஹுசைன் வீசிய 11-வது ஓவரில் டெவால்ட் பிரே​விஸ் ஃபைன் லெக் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார். மறு​முனை​யில் நிதான​மாக விளை​யாடிய ருது​ராஜ் கெய்க்​வாட் 21 பந்​துகளில், 15 ரன்​கள் எடுத்த நிலை​யில் பாட் கம்​மின்ஸ் பந்தை டீப் மிட்விக்​கெட் திசையில் விளாசிய போது இஷான் மலிங்​கா​விடம் கேட்ச் ஆனது.

இதையடுத்து ஷிவம் துபே களமிறங்​கி​னார். நித்​திஷ் குமார் ரெட்டி வீசிய 14-வது ஓவரில் ஷிவம் துபே ஒரு பவுண்​டரி விரட்ட டெவால்ட் பிரே​விஸ் தனது பங்​குக்கு ஒரு பவுண்​டரி​யும், ஒரு சிக்​ஸரை​யும் பறக்​க​விட்​டார். இந்த ஓவரில் 18 ரன்​கள் விளாசப்பட்டது. இஷான் மலிங்கா வீசிய அடுத்த ஓவரில் ஷிவம் துபே லாங் ஆன் திசை​யில் சிக்​ஸர் ஒன்றை பறக்​க​விட்​டார்.

15 ஓவர்​களில் சிஎஸ்கே அணி 132 ரன்​கள் எடுத்​தது. பாட் கம்​மின்ஸ் வீசிய 16-வது ஓவரின் முதல் பந்தை சிக்​ஸருக்கு பறக்​க​விட்ட டெவால்ட் பிரே​விஸ் அடுத்த பந்தை ஃபைன் லெக் திசையில் பவுண்​டரிக்கு விரட்​டி​னார். இஷான் மலிங்கா வீசிய 18-வது ஓவரின் 3-வது பந்தை சிக்​ஸருக்கு பறக்​க​விட்ட டெவால்ட் பிரே​விஸ் 5-வது பந்​தில் போல்​டா​னார்.

27 பந்​துகளை சந்​தித்த டெவால்ட் பிரே​விஸ் 4 சிக்​ஸர்​கள், 2 பவுண்டரி​களு​டன் 44 ரன்​கள் சேர்த்​தார். 5-வது விக்​கெட்​டுக்கு டெவால்ட் பிரே​விஸ், ஷிவம் துபே ஜோடி 38 பந்​துகளில், 59 ரன்​கள் சேர்த்​தது. ஷகிப் ஹுசைன் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை பவுண்​டரிக்கு விரட்​டிய ஷிவம் துபே 3-வது பந்​தில் போல்​டா​னார். ஷிவம் துபே 23 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 26 ரன்​கள் எடுத்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய பிர​சாந்த் வீர் 9 பந்​துகளில், 2 பவுண்டரி​களு​டன் 11 ரன்​களும், அகீல் ஹோசைன் 3 ரன்​களும் சேர்க்க 20 ஓவர்​கள் முடி​வில் சிஎஸ்கே அணி 7விக்​கெட்​கள் இழப்புக்கு 180 ரன்​கள் எடுத்​தது. ஹைத​ரா​பாத் அணி தரப்​பில் பாட் கம்​மின்ஸ் 3, ஷகிப் ஹுசைன் 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர். பிரஃபுல் ஹிங்​கே, இஷான் மலிங்கா ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

இதையடுத்து 181 ரன்​கள் இலக்​குடன் ஹைத​ரா​பாத் அணி பேட் செய்​தது. டிரா​விஸ் ஹெட் 6 ரன்​களில் முகேஷ் சவுத்ரி பந்​தில் அவரிடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். அபிஷேக் சர்மா 21 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 26 ரன்​கள் எடுத்த நிலை​யில் அகீல் ஹோசைன் பந்​தில் ஸ்பென்​சர் ஜான்​சனிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார்.

3-வது விக்​கெட்​டுக்கு இஷான் கிஷனுடன் இணைந்த ஹென்​ரிச் கிளாசன் அதிரடி​யாக விளை​யாடி​னார். அகீல் ஹோசைன் வீசிய 10-வது ஓவரிலும், நூர் அகமது வீசிய 11-வது ஓவரிலும் தலா ஒரு சிக்​ஸரை பறக்​க​விட்​டார் ஹென்​ரின் கிளாசன். இந்த ஜோடி​யின் அதிரடி​யால் ஹைத​ரா​பாத் அணி 12.1 ஓவர்​களில் 100 ரன்​களை எட்​டியது. மட்​டையை சுழற்​றிய ஹென்​ரிச் கிளாசன் 26 பந்துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 47 ரன்​கள் எடுத்த நிலை​யில் நூர் அகமது பந்​தில் ஸ்டெம்​பிங்க் ஆனார்.

அப்​போது ஸ்கோர் 14.3 ஓவர்​களில் 131 ஆக இருந்​தது. ஹைதராபாத் அணி​யின் வெற்​றிக்கு 33 பந்​துகளில் 50 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. ஹென்​ரிச் கிளாசன், இஷான் கிஷன் ஜோடி 3-வது விக்​கெட்​டுக்கு 41 பந்​துகளில் 71 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து நித்​திஷ் குமார் ரெட்டி களமிறங்​கி​னார். சீராக ரன்கள் சேர்த்த இஷான் கிஷன் 37 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் அரை சதம் அடித்​தார்.

ஹைத​ரா​பாத் அணி​யின் வெற்​றிக்கு கடைசி 4 ஓவர்​களில் 38 ரன்கள் தேவை​யாக இருந்​தது. அன்​ஷுல் கம்​போஜ் வீசிய 17-வது ஓவரில் இஷான் கிஷன் பவுண்​டரி ஒன்றை அடித்​தார். இந்த ஓவரில் 10 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது. முகேஷ் சவுத்ரி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்​தில் நித்​திஷ் குமார் ரெட்டி (11) ஆட்​ட​மிழந்​தார். இதனால் ஆட்​டத்​தில் பரபரப்பு ஏற்​பட்​டது. இதையடுத்து சலீல் அரோரா களமிறங்​கி​னார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்​டிய இஷான் கிஷன் கடைசி பந்தை சிக்ஸருக்கு பறக்​க​விட ரசிகர்​கள் அதிர்ச்​சி​யில் உறைந்​தனர்.

இந்த ஓவரில் மட்​டும் 15 ரன்​கள் விளாசப்​பட்​டிருந்​தது. இதனால் ஹைதராபாத் அணி வெற்​றியை நெருங்​கியது. 12 பந்​துகளில் 13 ரன்​களே தேவை என்ற நிலை உரு​வானது. அன்​ஷுல் கம்​போஜ் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை சிக்​ஸருக்கு விளாசிய இஷான் கிஷன் 3-வது பந்​தில் லாங் ஆஃப் திசை​யில் நின்ற உர்வில் படேலிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். இஷான் கிஷன் 47 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 70 ரன்கள் விளாசி​னார்.

இதையடுத்து ரவிச்​சந்​திரன் சமரன் களமிறங்க ஹைத​ரா​பாத் அணி 19 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 181 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. சலீல் அரோரா 10, ரவிச்​சந்​திரன் சமரன் 5 ரன்களு​டன் களத்​தில் இருந்​தனர். 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணிக்கு இது 8-வது வெற்​றி​யாக அமைந்​தது. இதன் மூலம் அந்த அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறியது.

13 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள ஹைத​ரா​பாத் அணி 8 வெற்றி, 5 தோல்வி​களு​டன் 16 புள்​ளி​களை பெற்று பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. சிஎஸ்கே ஆட்​டத்​தின் முடி​வானது குஜராதத் டைட்​டன்ஸ் அணி​யும் பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதை உறு​திப்​படுத்​தி​யது. அந்த அணி 13 ஆட்​டங்​களில் விளையாடி 16 புள்​ளி​களை பெற்​றுள்​ளது. சிஎஸ்கே அணிக்கு இது 7-வது தோல்​வி​யாக அமைந்​தது. இதன் மூலம் அந்த அணி​யின் பிளே ஆஃப் சுற்று ஏறக்​குறைய முடிவுக்கு வந்​தது.

13 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள சிஎஸ்கே அணி 6 வெற்​றி, 7 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 6-வது இடத்துக்கு தள்​ளப்​பட்​டது. சிஎஸ்கே தனது கடைசி ஆட்​டத்​தில் வரும் 21-ம் தேதி குஜ​ராத் டைட்​டன்​ஸுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அகம​தா​பாத்​தில் நடை​பெறுகிறது. சிஎஸ்கே இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்​றாலும் அதி​கபட்​ச​மாக 14 புள்ளிகளையே பெற முடி​யும். நடப்பு சாம்​பி​யான ஆர்​சிபி அணி 18 புள்​ளி​களு​டன் முதல் அணி​யாக பிளே ஆஃப் சுற்​றில் நுழைந்​து​விட்​டது. தற்​போது ஹைதராபாத், குஜ​ராத் அணி​களும் தகுதி பெற்​றுள்​ளன. மீதம் உள்ள ஒரு இடத்​துக்கு பஞ்​சாப் (13 புள்​ளி​கள்), ராஜஸ்​தான் (12 புள்ளி​கள்), கொல்​கத்தா (11) ஆகிய அணி​கள் மல்​லுக்​கட்ட உள்ளன.

குறைந்த வேகம்​...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதி​ராக நேற்று சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் பவர்பிளேவில் முதல் 3 ஓவர்​களில் 43 ரன்​கள் குவித்த சிஎஸ்கே அணி அதன் பின்​னர் 3 ஓவர்​களில் வெறும் 14 ரன்​களே சேர்த்​தது.

பவுண்​டரி அடிக்​காத கேப்​டன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி​யின் கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் தொடக்க வீரராக களமிறங்​கிய நிலை​யில் ரன்​கள் சேர்க்க தடு​மாறி​னார். 11.3 ஓவர்​கள் வரை அவர், களத்​தில் நின்ற நிலை​யில் 21 பந்துகளை சந்​தித்து ஒரு பவுண்​டரி கூட அடிக்​காமல் 15 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தார். நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்க பேட்ஸ்​மேன் ஒரு​வர் அதிக பந்​துகளை எதிர்​கொண்டு பவுண்​டரி அடிக்​காமல் ஆட்​ட​மிழந்​தது இதுவே முதன்​முறை​யாகும்.

ரசிகர்​கள் ஏமாற்​றம்

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி நேற்று சேப்​பாக்​கம் மைதானத்தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யுடன் மோதியது. இந்த சீசனில் சேப்​பாக்​கத்​தில் சிஎஸ்கே அணி​யின் கடைசி ஆட்​ட​மாக இது அமைந்​திருந்​தது. இதனால் இந்த போட்​டி​யில் தோனி களமிறங்​கக்​கூடும் என ரசிகர்​கள் எதிர்​பார்த்​தனர். ஆனால் டாஸ் நிகழ்​வின் போது கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட், தோனி காயத்​தில் இருந்து இன்​னும் மீள​வில்​லை. அதனால் இந்த போட்​டி​யில் களமிறங்​க​மாட்​டார் என தெரி​வித்​தார். இது மைதானத்​தில் திரண்​டிருந்த ரசிகர்​களுக்கு ஏமாற்​ற​மாக அமைந்தது.

சென்னை சூப்​பர் கிங்ஸ் அணிக்கு ஏமாற்​றம்: பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறியது ஹைதராபாத்
‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ முறையால் மதிப்பெண் குறைகிறதா? - சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பும் பின்புலமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in