மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி திலக் வர்மா 45 பந்துகளில் விளாசிய 101 ரன்கள் உதவியுடன் 199 ரன்கள் குவித்தது. 200 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணியானது 15.5 ஓவர்களில் 100 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் வாயிலாக மும்பை அணி தொடர்ச்சியான 4 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
ஆட்ட நாயகன் விருது வென்ற திலக் வர்மா கூறியதாவது: இந்த வெற்றி எனக்கும், எனது அணிக்கும் மிகவும் முக்கியமானது. கடந்த நான்கு அல்லது ஐந்து போட்டிகளாக, எனது மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த ஒரே விஷயம் என்னவென்றால், நான் களத்தில் அதிக நேரம் செலவிடவில்லை என்பதும், போதிய பந்துகளைச் சந்திக்கவில்லை என்பதும்தான்.
எனவே, ஆடுகளத்தில் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி, அதன் பிறகு அணியின் சூழலுக்கு ஏற்ப எனது ஆட்டத்தை மாற்றியமைப்பதே எனது இலக்காக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி அகமதாபாத்துக்கு வரும்போதெல்லாம், அவர்கள் வழக்கமாக எங்களுக்கு ஒரு கருப்பு மண் ஆடுகளத்தையே வழங்குகிறார்கள்.
இது இயல்பாகவே சற்று வேகம் குறைந்ததாக இருக்கும். எங்களது பேட்டர்களால் அதற்கு ஏற்ப மாற முடியாது என்பதல்ல, ஆனால் ஆடுகளத்தில் கூடுதல் பவுன்ஸ் இருந்தால் எங்களால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆடுகளம் மெதுவாகவும், பந்து குறைவாக எகிறி வந்ததாலும் நாங்கள் அதற்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக்கொண்டு பந்துகளை நேராக அடிக்க முயற்சிக்க வேண்டியிருந்தது.
பந்து பவுன்ஸ் ஆகாததால் ஸ்டெம்பிற்கு நேராக வரும் பந்துகளை குறுக்காக விளையாடுவது ஆபத்தானது என்று தோன்றியது. எனவே, பந்துகளை நேராக அடிக்க முடிவு செய்தேன். ஆடுகளத்தின் தன்மையை என்னால் சரியாகக் கணிக்க முடிந்தது. நல்லவேளையாக, என்னால் ரன்கள் குவிக்க முடிந்தது. தனிப்பட்ட முறையில், எனக்கு 3-வது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும். இருப்பினும், அணிக்குத் தேவையான எந்த இடத்திலும் விளையாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஏனென்றால், சிறுவயதிலிருந்தே எந்த வரிசையிலும் நம்பிக்கையுடன் விளையாடும் வகையிலேயே நான் பயிற்சி எடுத்துள்ளேன். ஆட்டம் நான் நினைத்தபடியே அமைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இருப்பினும், எதிர்காலத்தைப் பற்றி இப்போதே அதிகம் யோசிக்காமல், ஒவ்வொரு போட்டியாகக் கவனம் செலுத்த வேண்டும். இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு ஏறக்குறைய நாக்-அவுட் போட்டியைப் போன்றதுதான்.
எங்கள் அணியின் திறன் என்ன என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். உலகக்கோப்பை வென்ற பல வீரர்கள் அணியில் உள்ளனர். எங்களிடம் உள்ள அபாரமான திறமைகளை வைத்து எங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் திட்டமிட்டபடி சரியாகச் செயல்பட்டால், எங்களை யாராலும் தடுக்க முடியாது. எனவே, அடக்கத்துடனும் கவனத்துடனும் இருந்து தொடர்ந்து கடினமாக உழைப்பது மிகவும் முக்கியம். இவ்வாறு திலக் வர்மா கூறினார்.