விளையாட்டு

சூரியகுமார் யாதவ் நன்றாக ஆடவில்லை எனில் அணியையே அது பாதிக்கும் - ரோஹித் சர்மா

ஆர்.முத்துக்குமார்

நியூஸிலாந்து அணிக்கு எதிராக இன்று தொடங்கும் டி20 தொடருக்கான இந்தியா அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டிங் பார்ம் கவலையளிப்பதாக உள்ளது, அவர் நன்றாக ஆடவில்லை எனில் அது ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையையே காலி செய்து விடும் என்று முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா எச்சரித்துள்ளார்.

கடந்த 20 இன்னிங்ஸ்களுக்கும் கொஞ்சம் கூடுதலாக சூரியகுமார் யாதவ் இன்னமும் டி20 அரைசதம் எடுக்கவில்லை என்பது கண்கூடு. கான்பெராவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக 39 நாட் அவுட். இந்த இன்னிங்ஸுக்கு முன்னும்பின்னும் ஒரே சொதப்பல். 2024-ம் ஆண்டு அவர் வங்கதேசத்திற்கு எதிராக ஹைதராபாத்தில் 75 எடுத்ததுதான் கடைசியாக அவர் எடுத்த அரைசதம்.

          

இந்நிலையில் ரோஹித் சர்மா கூறும்போது, “கேப்டன் ஃபார்முக்கு வருவாரா இல்லையா என்பதல்ல மேட்டர். ஒரு வீரர் ஃபார்மில் இல்லை என்றால் டி20 போன்ற குறைந்த ஓவர் வடிவங்களில் ஒரு பேட்டரை இழப்பதைப் போன்றதாகும். அவர் ஒரு முக்கிய பவர் ஹிட்டர், அவர் ஃபார்மில் இல்லை, அல்லது ரன்கள் எடுக்கவில்லை என்றால் அது ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையையே பாதிக்கும். சூரியா நன்றாக ஆடவில்லை ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையுமே தடுமாறும்.

சூரியகுமார் யாதவ் இந்த வடிவத்தின் நெளிவு சுளிவுகளை அறிந்தவர். சக வீரர்களின் திறமைகள், பலவீனங்களையும் அறிந்தவர், ஆகவே அவர்களிடமிருந்து சிறந்ததை வெளிப்படுத்த வைக்கக்கூடியவர். அதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது ஃபார்ம் மிக முக்கியம். ஒரு கேப்டன் தன் பேட்டிங் மூலம் மற்ற வீரர்களை முன்னின்று வழிநடத்துவதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.” என்றார் ரோதித் சர்மா.

நியூஸிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர், இந்தியாவுக்கு எதிரான சமீபத்திய வெற்றிகள் மூலம் தன் அணி உத்வேகமாக இருக்கிறது என்றும் இந்த வெற்றிகள் டி20 தொடரிலும் நியூஸிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்புகளை பிரகாசமாக்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT