வைபவ் சூர்யவன்ஷி
குவாஹாட்டி: பந்துவீச்சாளர்களை பார்த்து விளையாடுவது இல்லை, மட்டைக்கு வரும் பந்துகளை மட்டுமே கவனித்து விளையாடுகிறேன் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயதான அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் குவாஹாட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 202 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாசினார்.
நடப்பு சீசனில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு எதிராக முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி அசத்தியிருந்த வைபவ் சூர்யவன்ஷி, ஆர்சிபி அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சை பதம் பார்த்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற வைபவ் சூர்யவன்ஷி கூறியதாவது:
பயிற்சியில் நான் என்ன செய்கிறேனோ அதையே போட்டியின் போதும் செய்ய முயற்சிக்கிறேன். தேவையில்லாமல் எதையும் கூடுதலாகச் செய்யாமல், எனது இயல்பான ஆட்டத்தை நம்பி விளையாடுகிறேன். புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட் என யார் பந்து வீசுகிறார்கள் என்பது மனதின் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் நான் பந்து வீச்சாளரைப் பார்க்காமல், வரும் பந்தை மட்டும் பார்த்து எனது ஆட்டத்தை விளையாட முயற்சிக்கிறேன். இவ்வாறு வைபவ் சூர்யவன்ஷி கூறினார்.