

பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள்
முலான்பூர்: ஐபிஎல் தொடரில் நேற்று நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 28 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் விளாசினார்.
மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 23 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சேர்த்தார். அபிஷேக் சர்மாவின் அதிரடியால் ஹைதராபாத் அணி 5.5 ஓவர்களிலேயே 100 ரன்களை குவித்தது.
முதல் விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஜோடி 49 பந்துகளில் 120 ரன்களை வேட்டையாடியது. கடும் அச்சுறுத்தல் கொடுத்த இந்த ஜோடியை 9-வது ஓவரை வீசிய ஷசாங் சிங் சீரான இடைவெளியில் வெளியேற்றினார்.
இஷான் கிஷன் 27, ஹெய்ன்ரிச் கிளாசன் 39, அங்கித் வர்மா 18, சலில் அரோரா 9 ரன்களில் நடையை கட்டினர். முதல் 8 ஓவர்களில் 120 ரன்களை குவித்த ஹைதராபாத் அணியில் அடுத்த 12 ஓவர்களில் 99 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஷசாங் சிங் 3 ஓவர்களை வீசி 20 ரன்களை வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 50 ரன்களை தாரைவார்த்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
220 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 33 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக தொடக்க வீரர்களான பிரியன்ஷ் ஆர்யா 20 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.2 ஓவர்களில் 99 ரன்கள் குவித்திருந்தது. 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 7 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணிக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 2 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.