விளையாட்டு

கால்பந்து திருவிழா நடைபெறும் விதம் முதல் 891 முதன்முறை வீரர்கள் வரை

செய்திப்பிரிவு

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கலந்து கொண்டுள்ள 48 அணிகளும் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் 12 பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் என 24 அணிகள் நேரடியாக அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். இது தவிர, 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிகளில் சிறந்த புள்ளிகள், கோல் வித்தியாசங்களை அடிப்படையாகக் கொண்ட 8 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இந்த 32 அணிகளும் ரவுண்ட் ஆஃப் 32 என்ற புதிய நாக்-அவுட் சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். இதில் இருந்து 16 அணிகள் அடுத்த நாக்-அவுட் சுற்றில் மல்லுக்கட்டும். இந்த சுற்றில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்கும், அங்கிருந்து 4 அணிகள் அரை இறுதிக்கும் முன்னேறும். அரை இறுதியில் வெற்றி பெறும் அணிகள் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

லீக் சுற்று இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகின்றன. ரவுண்ட் ஆஃப் 32 சுற்று ஜூன் 29 முதல் ஜூலை 4 முதல் வரையும், ஜூலை 4 முதல் 7 வரை கால் இறுதிக்கு முந்தைய சுற்றும் (ரவுண்ட் ஆஃப் 16) நடைபெறுகின்றன.

கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 10 முதல் 12 வரையும் அரை இறுதி ஆட்டங்கள் ஜூலை 15, 16-ம் தேதிகளிலும், 3-வது இடத்துக்கான ஆட்டம் ஜூலை 19-ம் தேதியும், இறுதிப் போட்டி ஜூலை 20-ம் தேதியும் நடைபெறுகின்றன. போட்டிகள் அனைத்தும் ஜீ தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் முதன்முறை வீரர்கள்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 1,248 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 357 வீரர்கள் ஏற்கெனவே உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். அதே வேளையில் 891 வீரர்கள் முதன்முறையாக உலகக் கோப்பையில் களம் காண்கின்றனர்.

உலகக் கோப்பைத் தொடரில் களம் காணும் அனைத்து வீரர்களையும் விட மிக அதிக அளவிலான சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார். அவர், 226 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆடவர் கால்பந்து வரலாற்றில் ஒரே வீரர் இத்தனை சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

அர்ஜெண்டினா நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸியுடன் இணைந்து 6-வது முறையாக களமிறங்கும் வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார் ரொனால்டோ. உலகக் கோப்பை தொடர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 22 போட்டிகளில் விளையாடி 8 கோல்கள் அடித்துள்ளார். அவர், விளையாடி உள்ள 5 உலகக் கோப்பையிலும் கோல் அடித்து அசத்தியுள்ளார்.

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த சாதனை ஜெர்மனி அணியின் முன்னாள் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் மிரோஸ்லாவ் குளோஸ் வசம் உள்ளது. அவர், 16 கோல்களை அடித்திருந்தார். அவருக்கு அடுத்தபடியாக பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோ 15, ஜெர்மனியின் முன்னாள் வீரர் ஜெர்டு முல்லர் 14 ஆகியோர் உள்ளனர். இந்த சாதனைகளை 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸியும், பிரான்ஸின் கிலியன் எம்பாப்பேவும் முறியடிக்கக்கூடும். மெஸ்ஸி இதுவரை 13 கோல்ககளையும், எம்பாப்பே 12 கோல்களையும் அடித்துள்ளனர்.

2018-ல் உலகக் கோப்பையை வென்று, பின்னர் 2022-ல் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் அணி, தற்போது நடைபெற உள்ள தொடரிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தொடர்ச்சியாக மூன்று முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற உலகின் 3-வது நாடு என்ற சாதனையைப் படைக்க தீவிரமாக முயற்சிக்கக்கூடும்.

இதற்கு முன்பு, மேற்கு ஜெர்மனி அணி 1982 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளின் இறுதிப் போட்டிகளில் தோற்று, பின்னர் 1990-ல் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல், பிரேசில் அணி 1994 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றதுடன், இடைப்பட்ட 1998 இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் தோல்வியைத் தழுவியிருந்தது.

1930-ம் ஆண்டு உருகுவேயில் தொடங்கிய முதலாவது உலகக் கோப்பை முதல் தற்போது வரை, 23 உலகக் கோப்பைத் தொடர்களிலும் பங்கேற்ற உலகின் ஒரே ஒரு நாடு பிரேசில் மட்டுமே ஆகும்.

இந்த முறை கேப் வெர்டே, குராசாவோ, ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 4 நாடுகள் உலகக் கோப்பைத் தொடரில் அறிமுகமாகின்றன. இவர்களின் வருகையோடு, உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை பங்கேற்றுள்ள ஒட்டுமொத்த நாடுகளின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

எகிப்து அணி உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை ஒரு வெற்றிகூடப் பெறாமல் ஏழு போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த அணி 5 தோல்வி, 2 டிராக்களை பதிவு செய்துள்ளது. ஜூன் 15 அன்று பெல்ஜியம் அணிக்கு எதிராகத் தொடங்கவுள்ள தங்களது முதல் போட்டியில் இந்த நீண்ட காலத் தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவர்கள் தீவிரமாக முயற்சி செய்யக்கூடும்.

கடந்த 22 உலகக் கோப்பைத் தொடர்களில் நடத்தப்பட்ட 964 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 2,720 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கூடுதலாக 40 போட்டிகள் நடத்தப்படவுள்ளதால், இதற்கு முன்பு 2022 கத்தார் உலகக் கோப்பையில் படைக்கப்பட்ட ஒரு தொடரின் அதிகபட்ச கோல் சாதனையான 172 கோல்கள் இந்த முறை நிச்சயம் முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் மிக மூத்த வீரருக்கும், மிக இளைய வீரருக்கும் இடையே 25 ஆண்டுகளுக்கும் மேலான வயது வித்தியாசம் உள்ளது. ஸ்காட்லாந்து அணியின் கோல்கீப்பர் கிரேக் கார்டன் தொடரின் முதல் நாளில் 43 ஆண்டுகள் மற்றும் 162 நாட்கள் வயதானவராக மிக மூத்த வீரராகக் களம் காண்கிறார்; அதே வேளையில், மெக்சிகோவின் கில்பர்ட் மோரா வெறும் 17 ஆண்டுகள் மற்றும் 240 நாட்கள் மட்டுமே நிரம்பிய மிக இளைய வீரராகக் களமிறங்குகிறார்.

SCROLL FOR NEXT