புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா ரூ.18 கோடி ஒப்பந்தத்துடன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறி உள்ளார். அவருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவை ரூ.16.35 கோடிக்கு மும்பை அணி வாங்கியிருந்தது. இந்தத் தொகையில் இருந்து ரூ.1.65 கோடிக்கு கூடுதலாக பஞ்சாப் அணிக்கு அவர், பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி உள்ளது. அவரது தொகையில் எந்தவித மாற்றமும் இல்லை.
இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் வீரர்கள் பரிமாற்றத்தில் இந்த தொகை சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் சஞ்சு சாம்சனை 2026-ம் ஆண்டு சீசனுக்காக சிஎஸ்கே அணி ரூ.18 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து வாங்கியிருந்தது. இதற்காக ரவீந்திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சாம் கரணை ரூ.2.4 கோடிக்கும் பரிமாற்றம் செய்திருந்தது.
ஐபிஎல் தொடரில் இதுவரை ஹர்திக் பாண்டியா 162 ஆட்டங்களில் விளையாடி 146.28 ஸ்டிரைக் ரேட்டுடன் 2,955 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 82 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 8 சீசன்களாக விளையாடி வந்த அர்ஷ்தீப் சிங் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியுள்ளார். 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர், சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
இதுவரை 96 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 111 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் பஞ்சாப் அணியின் வரலாற்றில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
2025-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 21 விக்கெட்களையும், 2026-ம் ஆண்டு சீசனில் 14 விக்கெட்களையும் வீழ்த்தினார். 27 வயதான அர்ஷ்தீப் சிங், இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 104 ஆட்டங்களில் விளையாடி 151 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.