வைபவ் சூர்யவன்ஷி
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள், அதிக ரன்கள், உலக பவுலர்கள் வீசும் பந்தையெல்லாம் அலட்சியமாக மைதானத்துக்கு வெளியே அனுப்பும் திறன் ஆகியவற்றால் உலக கிரிக்கெட் ஜாம்பவான்களையே வாய்ப்பிளக்க வைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரெக் சாப்பலும் இந்த வாய்ப்பிளப்புக்கு விதிவிலக்கல்ல. ஆனால், இவர் விடுக்கும் எச்சரிக்கை வேறு விதமானது.
தலைமுறைகளுக்கான திறமைதான் சூர்யவன்ஷி இதில் சந்தேகமில்லை. ஆனால், இவரது 15 வயதில் இத்தகைய ஆட்டம், அதற்கு உருவாக்கித் தரப்படும் சூழல்கள் ஆகியவை கிரிக்கெட் அமைப்புசார் நோயாகவும் மாறிவிடுகிறது என்கிறார் கிரெக் சாப்பல்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்தில் இவர் எழுதியுள்ள பத்தியில் வைபவ் சூர்யவன்ஷியின் ‘தலைமுறைகளுக்கான திறமை’-யை பாராட்டி விதந்தோதியதோடு கிரிக்கெட்டுக்கு இது ஒரு பெரிய அபாயக் காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கவும் செய்கிறார். முதலில் என்ன புகழ்கிறார் என்பதைப் பார்ப்போம்:
‘இந்த 15 வயது இளம் திறமையாளரான வைபவ் சூர்யவன்ஷி என்னும் இடது கை பேட்டர் நவீன பேட்டிங்கை இதுவரை யாரும் கண்டிராத ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்வதை நான் பார்த்தபோது, அந்த அற்புதத்துடன் ஒருவித ஆழ்ந்த கலக்க உணர்வும் ஏற்பட்டது.
நாம் இப்போது எதிர்கொள்ள வேண்டிய மையக் கேள்வி தெளிவாக உள்ளது. நாம் டி20 பேட்டிங்கின் மகத்தான பரிணாம வளர்ச்சியைக் காண்கிறோமா அல்லது மட்டைக்கும் பந்துக்கும் இடையிலான போட்டியின் நிரந்தரமான சிதைவைக் காண்கிறோமா?
சூர்யவன்ஷியின் முழு மட்டை வீச்சை உற்று நோக்கும்போது, நவீன காலத்தின் முரட்டுத்தனமான, தசை பலம் கொண்ட பவர்-ஹிட்டிங்கிலிருந்து அவரது ஆட்டத்தை உயர்த்தும் ஒரு தொழில்நுட்பத் தூய்மை நம்மை உடனடியாகக் கவர்கிறது. அவரது நேர்த்தியான, கட்டுப்பாடற்ற மட்டை வீச்சு, கிரிக்கெட்டின் தலைசிறந்த அழகியல்வாத முன்னாள் பேட்டர்கள் சிலரை நினைவூட்டுகிறது.
கிரெக் சாப்பல் | கோப்புப்படம்
அவரது நேர்த்தியான கீழ்நோக்கிய மட்டை வீச்சிலும், குறையற்ற சமநிலையிலும், மாபெரும் கிரேம் பொல்லாக் மற்றும் ஈடு இணையற்ற சர் காரிபீல்ட் சோபர்ஸின் சாயல்கள் தெளிவாகத் தெரிகின்றன. அவர் கிராஸ் பேட் அடிக்கும்போதும் அல்லது எக்ஸ்ட்ரா கவருக்கு மேல் தூக்கி அடிக்கும்போதும், பிரையன் லாராவின் மூர்க்கமான, உள்ளுணர்வு சார்ந்த மேதைமையும், ஆடம் கில்கிறிஸ்ட்டின் ஒரே பந்தில் வீழ்த்தும் பேரழிவுகரமான நோக்கமும் இணைந்திருப்பதை நம்மால் காண முடிகிறது.
சமகால வன்முறையுடன் கையாளப்படும் ஒரு செம்மையான, தூய்மையான இந்த உத்தி, அவரது திறமை இந்த விளையாட்டுக்குக் கிடைத்த ஒரு அரிய வரம் என்பதை நிரூபிக்கிறது. இருப்பினும், இவ்வளவு இளம் வயதில் அவர் அடைந்துள்ள முன்னெப்போதும் இல்லாத வெற்றி, ஓர் ஆழமான எச்சரிக்கை அறிகுறியாக அமைகிறது’ என்று கூறும் கிரெக் சாப்பல், அதே பத்தியில் இப்படிப்பட்ட திறமைகளால் ஆபத்து என்ன என்பதை கீழ்வருமாறு விவரிக்கிறார்:
‘தன் உடல் வளர்ச்சியைக் கூட இன்னமும் நிறைவு செய்யாத நிலையில் 15 வயது சிறுவன் உலக அரங்கில் களமிறங்கி, சர்வதேச அளவிலான முன்னணி பந்துவீச்சாளர்களை எந்த சிரமமும் இல்லாமல் அவமானப்படுத்தும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடிகிறதென்றால், அது இந்த விளையாட்டுக்குள் ஆழமாக வேரூன்றியுள்ள ஓர் அமைப்புசார் நோயை வெளிப்படுத்துகிறது.
சூர்யவன்ஷி என்பது அந்த சுரங்கத்தில் உள்ள ஆபத்தை முதலில் எச்சரிக்கும் ‘கேனரி பறவை’ போன்றவர். நவீன கிரிக்கெட் சூழல் பந்துவீச்சை முற்றிலும் அழித்துவிடும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் வெளிக்காட்டுகிறார்.
அதிநவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மட்டைகள், கணிசமாகக் குறைக்கப்பட்ட எல்லைக் கோட்டு (Boundary) தூரங்கள், மேலும் உயிரற்ற, தட்டையான ஆடுகளங்கள் ஆகியவற்றின் சேர்க்கை, விளையாட்டின் சமநிலையை மிகப் பெரிதாக பேட்ஸ்மென்கள் பக்கம் சாய்த்துவிட்டது. இந்த ஒருதலைப்பட்சமான சூழல், டி20 கிரிக்கெட்டை மீண்டும் மீண்டும் நடைபெறும் இயந்திரத்தனமான பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களின் தொடர்ச்சியான நிகழ்வாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்துகிறது; அது இறுதியில் விளையாட்டைப் பார்ப்போரையே விலகச் செய்யக்கூடும்.
எந்தவொரு விளையாட்டின் பொழுதுபோக்கு மதிப்பும் அடிப்படையில் நிச்சயமின்மை, பதற்றம் மற்றும் முடிவை முன்கூட்டியே கணிக்க முடியாத தன்மை ஆகியவற்றின் மீதே தங்கியுள்ளது. அந்த விறுவிறுப்பு உணர்வும் பரபரப்பும் விளையாட்டிலிருந்து நீக்கப்பட்டுவிட்டால், அந்தக் காட்சியின் கவர்ச்சியும் மிகவும் விரைவாக மங்கிவிடும்.
இந்தக் கட்டுப்பாடற்ற பேட்டிங் ஆதிக்கம் முற்றிலும் புதியதல்ல, ஆனால் இது நிறுவனமயமாக்கப்பட்டிருப்பது முன்னெப்போதும் இல்லாததாகும். முன்பு விவ் ரிச்சர்ட்ஸ் இத்தகைய அதிரடி ஆட்டத்தை நிகழ்த்தியபோது, அது ஒரு நேர்த்தியான ஆடுகளத்தில், சமநிலையான, ஆக்ரோஷமான தாக்குதலைத் தனது தூய, கலப்படமற்ற மேதைமையால் முறியடித்த ஆச்சரியமளிக்கும் அசாதாரண நிகழ்வாக இருந்தது.
இன்று, ஐபிஎல் அந்த வகையான ஓர் அரிய மாயாஜால ஆட்டத்தை சாதக சூழ்நிலைகளை உருவாக்கி யார் வேண்டுமானாலும் அப்படி ஆட முடியும் என்பதை நிறுவனமயமாக்கி ஜனநாயகப்படுத்தியுள்ளது. நவீன டி20-யின் கட்டமைப்பு விதிகள், அரிதான, மாயாஜாலத் திறமை வெளிப்பாடாக இருந்த ஒன்றை, இயந்திரத்தனமான எதிர்பார்ப்பாக மாற்றிவிட்டன.
ஐபிஎல்-லில் குறுகிய பார்வையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியால் இந்த ஏற்றத்தாழ்வு நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது. இந்த தந்திரோபாய ஆடம்பரம், எந்தவித பின்விளைவுகளும் இன்றி பேட்டிங் அணிக்கு ஒரு கூடுதல் சிறப்பு பேட்ஸ்மேனை திறம்பட வழங்குகிறது. கீழ்வரிசை பேட்ஸ்மேன்கள் சரிவடைவார்கள் என்ற பாரம்பரிய அபாயத்தை நீக்குவதன் மூலம், விக்கெட்டுகளைப் பாதுகாக்க வேண்டிய வரலாற்றுத் தேவையின் சுமையிலிருந்து முற்றிலும் விடுபட்டு, முதல் பந்திலிருந்தே மேல்வரிசை பேட்ஸ்மேன்கள் கண்மூடித்தனமாக ஸ்விங் செய்ய இந்த விதி சுதந்திரம் அளிக்கிறது.
டி20 கிரிக்கெட் ஒரு நிலையற்ற, ஒருதலைப்பட்சமான பேட்டிங் திருவிழாக் கோலமாக இல்லாமல், அர்த்தமுள்ள ஒரு விளையாட்டாக நிலைத்திருக்க வேண்டுமானால், ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் சம உரிமை பந்து வீச்சிற்கும் வழங்கப்பட வேண்டும். பந்துவீச்சாளருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விதிகளை மாற்றுவதன் மூலம், சூர்யவன்ஷி போன்ற இளம் நட்சத்திரங்களின் மேதைமையை நாம் குறைத்து விடுவதில்லை. மாறாக, அதை மேம்படுத்தும்.
உண்மையான வலிமை மிக்க ஒரு தடையை வெல்லும்போதுதான் உண்மையான மகத்துவம் உருவாகிறது. நிர்வாகிகள் தலையிட்டு, போட்டியின் ஆன்மாவை மீட்டெடுத்து, அடுத்த 250 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் ஆழ்ந்த நுணுக்கம், உயர் உத்தி மற்றும் நீடித்த சமநிலை கொண்ட ஒரு விளையாட்டாகத் தொடர்வதை உறுதிசெய்ய வேண்டிய நேரம் இது’ என்று கூறியுள்ளார் கிரெக் சாப்பல்.