விளையாட்டு

2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்: உலக அளவில் வைபவ் சூர்யவன்ஷிக்கு 6-ம் இடம்!

வேட்டையன்

சென்னை: நடப்பு ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் (People) பட்டியலில் உலக அளவில் இந்தியாவை சேர்ந்த 14 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 6-ம் இடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் அவர் முதலிடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.1 கோடிக்கு அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் ஒப்பந்தம் செய்தது. அதற்கு முன்பு ஆஸ்திரேலிய யு19 அணிக்கு எதிராக 58 பந்துகளில் சதம் விளாசினார். கடந்த ஐபிஎல் சீசனில் 7 போட்டிகளில் விளையாடி மொத்தம் 252 ரன்கள் எடுத்தார். இதில் 1 சதம், 1 அரை சதமும் பதிவு செய்தார். குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் பதிவு செய்து அசத்தினார்.

பின்னர் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய யு19 அணியில் இடம்பெற்று, இளையோர் ஒருநாள் போட்டியில் 52 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இது அந்த பிரிவில் அதிவேக சதமாக அமைந்தது. பின்னர் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான ஆசிய கோப்பை தொடரிலும் சிறப்பாக ஆடினார். இந்த தொடரில் 4 இன்னிங்ஸில் 239 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக 32 பந்துகளில் சதம் விளாசி இருந்தார்.

அண்மையில் சையது முஸ்டாக் அலி டி 20 கிரிக்கெட் தொடரில் மகாராஷ்டிரா அணி உடனான ஆட்டத்தில் பிஹார் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி விளையாடினார். இதில் 61 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார்.

இதன் மூலம் சையது முஸ்டாக் அலி டி20 தொடரில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு 14 வயது 250 நாட்கள் ஆகிறது. இந்திய கிரிக்கெட்டின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் அவர், இப்போது நடப்பு ஆண்டில் கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் உலக அளவில் 6-ம் இடத்தை பிடித்துள்ளார்.

SCROLL FOR NEXT