விளையாட்டு

கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா விளாசலில்: சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது நியூஸி.

பெ.மாரிமுத்து

சென்னை: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் ‘டி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் நியூஸிலாந்து - கனடா அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த கனடா 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 173 ரன்​கள் குவித்து அசத்​தி​யது. தொடக்க வீரரும் இடது கை பேட்​ஸ்​மேனு​மான யுவ​ராஜ் சம்ரா 65 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களு​டன் 110 ரன்​கள் விளாசி​னார்.

டி20 உலகக் கோப்​பை​யிலும், சர்​வ​தேச டி20 அரங்​கிலும் யுவ​ராஜ் சம்​ரா​வின் முதல் சதமாக இது அமைந்​தது. ஜேம்ஸ் நீஷாம் வீசிய 6-வது ஓவரில் யுவ​ராஜ் சம்ரா தொடர்ச்​சி​யாக 3 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸரை விளாசி மிரளச் செய்​தார். இந்த 4 ஷாட்​களை​யும் அவர் வெவ்​வேறு திசைகளில் அடித்து கவனம் ஈர்த்​தார். முதல் விக்கெட்டுக்கு யுவராஜ் சம்ரா, தில்பிரீத் பஜ்வா ஜோடி 14 ஓவர்களில் 116 ரன்கள் விளாசியிருந்தது.

          

கேப்டன் தில்​பிரீத் பஜ்வா 36, நவ்​னீத் தலி​வால் 10, நிக்கோலஸ் கிர்​டன் 2, ஹர்ஷ் தாகர் 3, திலான் ஹெய்​லிகர் 8 ரன்​கள் சேர்த்​தனர். நியூஸிலாந்து அணி தரப்​ பில் மேட்ஹென்​றி, ஜேக்​கப் டஃபி, கைல் ஜேமிசன், ஜேம்ஸ் நீஷாம் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர்.

174 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். மட்​டையை சுழற்​றிய ஃபின் ஆலன் 8 பந்​துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 21 ரன்​கள் எடுத்த நிலை​யில் திலான் ஹெய்​லிகர் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். மற்​றொரு தொடக்க வீர​ரான டிம் ஷெய்​பர்ட்ட 6 ரன்​களில் சாத் பின் ஜாபர் பந்​தில் வெளி​யேறி​னார்.

30 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் கிளென் பிலிப்​ஸ், ரச்​சின் ரவீந்​தி​ரா​வுடன் இணைந்து கனடா அணியின் பந்​வீச்சை வெளுத்து வாங்​கி​னார். தனது 12-வது அரை சதத்தை கடந்த கிளென் பிலிப்ஸ் 36 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 76 ரன்களும், 4-வது அரை சதத்தை கடந்த ரச்​சின் ரவீந்​திரா 39 பந்​துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்​டரி​களு​டன் 59 ரன்​களும் விளாச நியூஸிலாந்து அணி 15.1 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்புக்கு 176 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

3-வது விக்​கெட்​டுக்கு கிளென் பிலிப்​ஸ், ரச்​சின் ரவீந்​திரா ஜோடி 12 ஓவர்​களில் 146 ரன்​களை குவித்​தது. 8 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணிக்கு இது 3-வது வெற்​றி​யாக அமைந்தது. அந்த அணி லீக் சுற்​றில் தனது பிரி​வில் 3 வெற்றி, ஒரு தோல்​வி​யுடன் 6 புள்​ளி​கள் பெற்று 2-வது இடம் பிடித்து சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறியது. இதே பிரி​வில் தென் ஆப்​பிரிக்க அணி ஏற்​கெனவே சூப்பர் 8 சுற்​றில் நுழைந்​திருந்​தது.

22 பந்துகளில் பிலிப்ஸ் அரை சதம்

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் கனடா அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் 22 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையை கிளென் பிலிப்ஸ் படைத்தார்.

இதற்கு முன்னர் 2009-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிராக ஆரோன் ரெட்மான்ட் 23 பந்துகளிலும், கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் டிம் ஷெய்பர்ட் 23 பந்துகளிலும் அரை சதம் அடித்திருந்தனர்.

இளம் வயதில் சதம் அடித்த யுவராஜ் சம்ரா

டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கனடாவின் யுவராஜ் சம்ரா 58 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த யுவராஜ் சம்ரா.

அவருக்கு 19 வயதாகிறது. இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் அகமது ஷெஹ்சாத் தனது 22 வயதில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் யுவராஜ் சம்ரா.

SCROLL FOR NEXT