விளையாட்டு

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு முழு ஆதரவு: ஐசிசிக்கு பாக். வாரியம் கடிதம்

ஆர்.முத்துக்குமார்

2026 ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணியின் பங்கேற்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) கடிதம் எழுதி, இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட விரும்பவில்லை என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாட்டுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இந்தக் கடிதத்தின் நகல் ஐசிசி வாரிய உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக ஆங்கில கிரிக்கெட் இணையதளம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வங்​கதேச அரசின் விளை​யாட்​டுத் துறை ஆலோ​சகர் ஆசிஃப் நஸ்​ருல், “பிசிசிஐ தரும் அழுத்தத்தின் காரண​மாக ஐசிசி எங்​களுக்கு அழுத்​தம் தர முயற்​சித்​தால் நாங்​கள் அதற்கு அடிபணிய மாட்​டோம். எந்த ஒரு காரண​முமின்றி ஐசிசி வைக்​கும் நிபந்தனைகளை நாங்​கள் ஏற்​றுக்​கொள்ள மாட்​டோம்.

          

கடந்த காலங்​களில் பாகிஸ்​தான் அணி இந்​தி​யா​வில் கிரிக்​கெட் போட்​டிகளில் விளை​யாட மாட்​டோம் எனக் கூறிய​தால், போட்டி நடத்​தப்​படும் இடங்​களை ஐசிசி மாற்றியது. தர்க்​கரீ​தி​யான அடிப்​படை​யில் மைதானத்தை மாற்​று​மாறு நாங்​கள் கேட்​டுள்​ளோம், மேலும் நியாயமற்ற அழுத்​தத்​தைக் கொடுத்து இந்​தி​யா​வில் விளை​யாடு​மாறு எங்​களை வற்​புறுத்​த முடி​யாது” என்று கூறியிருந்தது. வங்கதேசத்தின் இந்த நிலைப்பாட்டுக்குத்தான் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, வங்கதேச அணியின் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை பரிசீலிக்க, ஐசிசி புதன்கிழமை (ஜனவரி 21) வாரியக் கூட்டத்திற்கு அழைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டம் பாகிஸ்தான் ஐசிசிக்கு எழுதிய வங்கதேச ஆதரவு நிலைப்பாட்டுக் கடிதத்தால் ஏற்படுத்தப்பட்டதா என்பது பற்றி தெரியவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வங்கதேச வாரிய முடிவுக்கான ஆதரவு இத்தகைய சந்தேகங்களை எழுப்பினாலும் ஐசிசியின் தற்போதைய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது எனக் கூறப்படுகிறது.

உலகக் கோப்பை அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேசம் தனது போட்டிகளை இந்தியாவிலேயே விளையாட வேண்டும் என்றும் ஐசிசி உறுதியாக தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தைகளின் போதும் வங்கதேச வாரியத்திடம் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.

வங்கதேச அரசு ஆதரவுடன், இந்தியாவில் நடைபெறும் குழு போட்டிகளுக்காக தங்கள் அணியை அனுப்ப முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐசிசி மற்றும் வங்கதேச வாரியம் இடையே பலமுறை சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. சமீபத்தில் கடந்த வார இறுதியில் டாக்காவில் நடந்த சந்திப்பிலும் இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் செய்யவில்லை. ஜனவரி 21-ஆம் தேதி — போட்டிகள் தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் — இறுதி முடிவுக்கான கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசம் ஆடும் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வந்ததாகவும், மேலும் இந்த விவகாரத்தின் முடிவைப் பொறுத்து உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இவை உறுதிப்படுத்தப்படாத செய்திகள் ஆகும்.

ஐபிஎல் தொடரிலிருந்து வங்கதேச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விலக்க வேண்டும் என்று பிசிசிஐ கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனைகள் மூண்டுள்ளன.

SCROLL FOR NEXT