சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 2027-ம் ஆண்டுக்கான சீசனை முன்னிட்டு வரும் டிச.16-ம் தேதி மினி ஏலம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க சுமார் 1,220 வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் யார், யார் என பார்ப்போம்.
ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் சீசனுக்கு முன்னதாக வீரர்கள் ஏலம் நடைபெறுவது வழக்கம். 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான திறன் கொண்ட வீரர்களை இதன் மூலம் தேர்வு செய்ய முடியும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலமும் ஐபிஎல் கிரிக்கெட்டில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த 2025 சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற்றது. அடுத்த மெகா ஏலம் 2028 சீசனை முன்னிட்டு நடைபெறும்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெற உள்ள மினி ஏலம், ஐபிஎல் 2027 சீசனுக்கானது. இதில் மொத்தம் 1,220 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 14 பேர் இந்திய அணிக்காகவும், 170 பேர் தங்கள் தேசத்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள். இந்த 1,220 வீரர்கள் அடங்கிய பட்டியலில் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்து தெரிவிக்கலாம்.
அவர்களது பெயர் வீரர்களின் ஏலத்தின் இறுதி வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும். அவர்களை தான் 10 ஐபிஎல் அணிகளும் வாங்க முடியும்.
இந்திய வீரர்களை பொறுத்தவரை ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், தீபக் சஹர், தீபக் ஹூடா, கருண் நாயர், ராகுல் திரிபாதி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மகன் ஆர்யவீர் சேவாக் ஆகியோர் இதில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.