பாரா பாட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்

 
விளையாட்டு

பாரா பாட்மிண்டன் முதல் கிரிக்கெட் வரை | ஸ்போர்ட்ஸ் ரவுண்ட்-அப்

செய்திப்பிரிவு

இஷாராணிக்கு 2-வது இடம் ஹோ சி மின் சிட்டி வியட்நாம் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை இஷாராணி பரூவா 2-வது இடம் பிடித்தார்.

வியட்நாமின் ஹோ சி மின் சிட்டியில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை இஷாராணி பரூவா, தாய்லாந்தின் சருண்ராக் விடிட்சர்ன் ஆகியோர் மோதினர்.

இதில் சருண்ராக் விடிட்சர்ன் 21-8, 21-15 என்ற செட் கணக்கில் இஷாராணி பரூவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். வெறும் 34 நிமிடங்களிலேயே இந்த ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இறுதிப் போட்டியில் தோல்வி கண்ட இஷாராணி பரூவா 2-வது இடத்தைப் பிடித்தார்.

கத்தார் கிளாசிக் ஸ்குவாஷ்: இந்தியாவின் அனஹத் சிங் தோல்வி

கத்தார் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை அனஹத் சிங் தோல்வி அடைந்தார். கத்தாரின் தோஹா நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அனஹத் சிங்கும், கத்தார் வீராங்கனை டின்னே கிலிஸும் மோதினர். இதில் டின்னே கிலிஸ் 11-4, 8-11, 9-11, 11-4, 11-3 என்ற புள்ளிகள் கணக்கில் அனஹத் சிங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஜப்பான் பாரா பாட்மிண்டன்: இந்திய வீரருக்கு தங்கம்

ஜப்பான் பாரா பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்றார். ஜப்பானின் டோக்கியோவில் இப்போட்டிகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் எஸ்எல் 3 பிரிவு இறுதிப் போட்டியில் பிரமோத் பகத் 21-16, 21-8 என்ற கணக்கில் சகநாட்டு வீரர் யு.குமாரை வீழ்த்தி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

மேலும், ஆடவர் இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு 5 பிரிவில் பிரமோத், சுகந்த் கதம் ஜோடி 5-21, 15-21 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் ஹிக்மத் ரம்தானி, பிரெடி செடியாவன் ஜோடியிடம் வீழ்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது. பாரா பாட்மிண்டன் போட்டிகளில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் பிரமோத் பகத் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: தென் ஆப்பிரிக்க வீரர் விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஓட்நீல் பார்ட்மென் விலகியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் போட்டியில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வீரர் ஓட்நீர் பார்ட்மென் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அவருக்குப் பதிலாக டுவான் ஜான்சன் அணியில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா, காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியலிருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT