விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் முன்னேற்றம்

செய்திப்பிரிவு

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றுக்கு போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முன்னேறியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 6-வது நாள் போட்டியின்போது அரங்கேறிய மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவரும், முன்னணி வீராங்கனைகளுள் ஒருவருமான இகா ஸ்வியாடெக்குடன், சக நாட்டு வீராங்கனை மாக்டா லினெட் மோதினார்.

இதில் இகா ஸ்வியா டெக் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் மாக்டாலினெட்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில் நடைபெற்ற மற்ற 3-வது சுற்று ஆட்டங்களில் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள உக்ரைன் வீராங்கனை மார்ட்டா கோஸ்ட்யுக் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் சுவிட்சர்லாந்து வீராங்கனை விக்டோரிஜா கோலுபிக்கைத் தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் சீன வீராங்கனை வாங்ஜியு 6-3, 7-5 என்ற செட் கணக்கில் உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்ட்சேவாவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ரூபலேவ் வெற்றி

ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீரரும், தரவரிசையில் 11-வது இடத்தில் இருப்பவருமான ஆந்த்ரே ரூபலேவ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரூபலேவ் 7-5, 7-6(2), 7-6(2) என்ற செட் கணக்கில் போர்ச்சுகல் வீரர் நுனோ போர்கெஸைத் தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் பாப்லோ கரேனோ புஸ்டா 7-6 (0), 7-5, 3-6, 6-4. என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினா வீரர் தியாகோ அகஸ்டின் திரான்டேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

SCROLL FOR NEXT