விளையாட்டு

கிலியன் எம்பாப்பே, உஸ்மான் டெம்பலே அசத்தல்: அரை இறுதியில் பிரான்ஸ் அணி | FIFA WC 2026

மொராக்கோவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது

செய்திப்பிரிவு

பாஸ்டன்: உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. கிலியன் எம்பாப்பே, உஸ்மான் டெம்பலே கோல் அடித்து அசத்தினர்.

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - மொராக்கோ அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அணி பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்து ஆதிக்கம் செலுத்தியது. 4-வது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பே அடித்த ஷாட் போஸ்ட்டின் வலது பக்கமாக நூலிழையில் வெளியேறியது. தொடர்ந்து 26-வது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பேவை, மொராக்கோ டிஃபெண்டர் நுஸைர் மஸ்ராவி ஃபவுல் செய்ததால், விஏஆர் ஆய்வுக்குப் பிறகு பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இருப்பினும், எம்பாப்பே அடித்த பெனால்டி ஷாட்டை மொராக்கோ கோல்கீப்பர் யாசின் போனோ இடதுபுறம் பாய்ந்து தடுத்தார். முதல் பாதி ஆட்டத்தில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 45+5-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் வீரர் அஷ்ரஃப் ஹக்கிமி பாக்ஸிற்குச் சற்று வெளியிலிருந்து அடித்த ஃப்ரீ-கிக் கோல் கம்பத்தின் வலது பக்கத்தைக் கடந்து நூலிழையில் வெளியே சென்றது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் எதுவும் அடிக்கப்படாததால் ஆட்டம் 0-0 என சமநிலையில் இருந்தது.

பிரான்ஸ் முன்னிலை

60-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி தனது முதல் கோலை அடித்தது. பிரான்ஸ் அணியின் வீரர் துவேவிடமிருந்து பந்தைப் பெற்று பாக்ஸின் உள்ளே இருந்தபடி மொராக்கோ அணியின் டிஃபென்டர் தியோப்பை ஏமாற்றி கிலியன் எம்பாப்பே அடித்த ஷாட் கோல் வலையை துளைத்தது. இதனால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்த 6-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி மீண்டும் கோல் அடித்தது.

66-வது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பே கொடுத்த அருமையான பாஸை பயன்படுத்தி பாக்ஸின் விளிம்பிலிருந்து உஸ்மான் டெம்பலே அடித்த தாழ்வான ஷாட்டை மொராக்கோ அணியின் கோல்கீப்பர் யாசின் போனோவால் முழுமையாக தடுக்க முடியாமல் போக, பந்து கோல் வலையின் கீழ் கார்னரை துளைத்தது. இதனால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இறுதி வரை முயற்சி செய்த போதிலும் மொராக்கோ அணியால் பதிலடி கொடுக்க முடியாமல் போனது. முடிவில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக அரை இறுதியில் கால்பதித்துள்ளது. கடந்த 2018, 2022-ம் ஆண்டு தொடரிலும் பிரான்ஸ் அணி அரை இறுதியில் விளையாடி இருந்தது.

வரும் 14-ம் தேதி டல்லாஸ் மைதானத்தில் நடைபெறும் அரை இறுதி சுற்றில் பிரான்ஸ் அணியானது ஸ்பெயின் அணியை எதிர்த்து விளையாடும்.

20-ல் 20 கோல்கள்

நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மொராக்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கிலியன் எம்பாப்பே 60-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். உலகக் கோப்பை தொடர்களில் அவர், இதுவரை 20 ஆட்டங்களில் விளையாடி 20 கோல்கள் அடித்துள்ளார். அதிக கோல்கள் அடித்துள்ளவர்களின் பட்டியலில் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸியை விட (21 கோல்கள்) எம்பாப்வே ஒரு கோல் மட்டுமே பின்தங்கியுள்ளார்.

எம்பாப்பே காயம்

மொராக்கோ அணியின் டிஃபென்டரால் பலமாகத் தாக்கப்பட்ட பிரான்ஸ் அணியின் நட்சத்திரமான கிலியன் எம்பாப்பே ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் மைதானத்தில் கீழே விழுந்தார். அடுத்த நிமிடமே அவர் வெளியேற்றப்பட்டு மாற்று வீரர் களம் இறக்கப்பட்டார். பின்னர் அவர், தனது வலது கணுக்காலில் ஐஸ் பேக் வைத்தபடி மாற்று வீரர்களின் பெஞ்ச்சில் அமர்ந்திருந்தார். எனினும் போட்டி முடிவடைந்த பின்னர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

கோல்டன் பூட் பந்தயம்

SCROLL FOR NEXT