தஹ்சின் முகமது, சர்ப்ரீத் சிங், சாமுவேல் மௌட்டூசாமி, நிஷான் வேலுப்பிள்ளை

 
விளையாட்டு

கால்பந்து உலகக் கோப்பையில் தமிழக தொடர்புடைய இரு வீரர்கள் உட்பட நான்கு இந்திய வம்சாவளி வீரர்கள்!

ஆர்.முத்துக்குமார்

இம்மாதம் 11ம் தேதி தொடங்கவிருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் இந்திய கால்பந்து அணி தகுதி பெறாவிட்டாலும் நான்கு இந்திய வம்சாவளி வீரர்கள் சில அணிகளில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இதில் 2 வீரர்கள் தமிழக வம்சாவளியைக் கொண்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவில் நேரலையில் போட்டிகளைக் காண கடைசி நேரத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது Zee தொலைக்காட்சி நிறுவனம், யுனைடெட் ஸ்போர்ட்ஸ் ஹெச்.டி. மற்றும் யுனைடெட் ஸ்போர்ட்ஸ் என்ற இரு சானல்களில் உலகக்கோப்பைப் போட்டிகளை இந்திய ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

பிரேசிலும் அர்ஜென்டினாவும் வழக்கம்போல இந்திய ரசிகர்களின் மிகவும் விருப்பமான அணிகளாக உள்ளன. பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய அணிகளுக்கும் ஏராளமான ஆதரவாளர்கள் இருக்கின்றனர். ஆனால், இந்த முறை கத்தார் அணியையும் கேரள கால்பந்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்க உள்ளனர்.

அதற்குக் காரணம், கத்தார் அணியின் ஆரம்ப உலகக் கோப்பை பட்டியலில் இடம் பெற்றுள்ள 19 வயது விங்கர் தஹ்சின் முகமது. தோஹாவில் பிறந்த அவர், கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த மலையாளி பெற்றோரின் மகன் ஆவார்.

உலகக் கோப்பைக்கான முதற்கட்ட அணியில் தஹ்சின் இடம் பெற்றதையடுத்து, இறுதிக் குழுவிலும் அவர் தேர்வாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கேரள ரசிகர்களிடையே உருவானது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் அவர் விளையாடும் வாய்ப்பு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஹ்சினின் தந்தை முன்னாள் கால்பந்து வீரர். தஹ்சின் ஏற்கனவே கத்தாரின் 17 வயதுக்குட்பட்ட மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளில் விளையாடியுள்ளார். அவரது வளர்ச்சியைப் பற்றி எழுத்தாளரும் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூரும் பாராட்டியுள்ளார்.

நியூசிலாந்து அணியின் தாக்குதல் மிட்பீல்டரான சர்ப்ரீத் சிங் அதில் குறிப்பிடத்தக்கவர். ஜலந்தரை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த 27 வயதான அவர், 2018 முதல் நியூசிலாந்து தேசிய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை மூன்று கோல்களையும் அடித்துள்ளார்.

காங்கோ ஜனநாயகக் குடியரசு அணியில் இடம் பெற்றுள்ள சாமுவேல் மௌட்டூசாமிக்கும் இந்தியத் தொடர்பு உள்ளது. அவரது தாய் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர்; தந்தை தமிழர் வம்சாவளியைக் கொண்ட இந்தோ-க்வாடலூப்பியர். பாரிசில் பிறந்த 29 வயதான தற்காப்பு மிட்பீல்டர், 2019-இல் காங்கோ தேசிய அணிக்காக அறிமுகமானார்.

ஆஸ்திரேலிய அணியின் விங்கரான நிஷான் வேலுப்பிள்ளையும் இந்திய வேர்களைக் கொண்டவர். அவரது தந்தை மலேசியத் தமிழர்; தாய் ஆங்கிலோ-இந்தியர். உலகக் கோப்பை அரங்கில் தன்னை நிரூபிக்க அவர் தயாராக உள்ளார்.

2006 உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணிக்காக விளையாடிய விகாஷ் தோராசூவுக்குப் பிறகு, உலகக் கோப்பையில் இந்திய வம்சாவளியைக் கொண்ட வீரர்கள் மீண்டும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. தோராசூவின் முன்னோர்கள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மொரீஷியஸுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT