விளையாட்டு

அரிய நோய் பாதிப்பு: டெல்லி மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் ஆப்கன் முன்னாள் பவுலர்

ஆர்.முத்துக்குமார்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்பக் காலங்களில் கிட்டத்தட்ட வாசிம் அக்ரமுடைய உருவத் தோற்றம் மற்றும் அதே இடது கைபந்து வீச்சு ஆக்‌ஷன் போன்றும் உடைய பவுலரை பலரும் அறிந்திருக்கலாம். அவர்தான் ஷபூர் ஜத்ரான். அவருக்கு இப்போது வயது 38. ஆனால், அவர் இப்போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை உள்ளிருந்தே பாதிக்கும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

நல்ல ஆறடி உயர பவுலர். டெஸ்ட் தவிர இவர் ஆடிய அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் 244 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவரது பந்து வீச்சில் ஆக்ரோஷம், எழுச்சி இருக்கும். ஆனால் இப்போது துரதிர்ஷ்டவசமாக “Hemophagocytic Lymphohistiocytosis” என்ற அரிய வகை நோயெதிர்ப்பு மண்டல நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார். நியுடெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆனால் இந்த நோய் வந்தவர்கள் பிழைப்பது மிகக் கடினம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நம் உடலில் இருக்கும் டி-செல்கள், மேக்ரோபேஜஸ் போன்ற நோயெதிர்ப்பு செல்கள் ஓருங்கு குலைந்து தாறுமாறாகி நம் உடலையே தாக்கத் தொடங்கும். இதனால் மேலதிக அழற்சி கண்டு விடும். கடுமையான ஜுரம் மண்ணீரல் வீக்கம், பிளட் கவுண்ட்கள் கடுமையாக வீழ்ச்சியடைதல் என்று பலவகையில் இந்த நோய் பாதிப்பு ஏற்படுத்தும் இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட உடலுறுப்புகள் சேதமடையும் விரைவில் குணப்படுத்தவில்லை எனில் மரணம் உறுதி.

இதற்கு கீமோ தெரபி, நோயெதிர்ப்புச் சக்தியையே அடக்கும் மருந்துகள், மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை ஆகியவை பலனளிக்கலாம் என்று மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன. 6 அடி 2 அங்குல உயரத்துடன் நல்ல கட்டுமஸ்தான உடல் அமைப்புடன், அலைஅலையாக எழுவதும் வீழ்வதுமான நீள் தலைமுடியுடன் கிட்டத்தட்ட பவுண்டரி அருகிலிருந்து ஓடி வரும் ஆக்ரோஷமான ஒரு பவுலர் இன்று HLH என்ற டெரிமினல் நோயினால் ஐசியூ-வில் கிடக்கிறார்.

பெரும்பாலும் குழந்தைகளையே இந்த அரிய நோய் பாதிக்கும், சில அரிய சந்தர்ப்பங்களில் பெரியோரையும் தாக்கும். குறிப்பாக கேன்சர் இருந்தால் இந்த நோய் தாக்குவதற்கான ஏதுவான சூழ்நிலை உடலில் உருவாகும். இது ஒருவகை auto-immune நோய் வகையாகும். ‘வளர்த்த கடா முட்ட வந்த’ கதையாக நம் உடல் பேணி வளர்த்த நோயெதிர்ப்பு சக்தியே நம் உயிருக்கு எமனாகும் ஒரு கொடிய வகை நோய்.

2009 மற்றும் 2020 என்று 80 போட்டிகளில் ஆப்கான் அணிக்காக ஆடியுள்ளார் ஷபூர் ஜத்ரான். கடந்த அக்டோபரில்தான் இந்த நோயின் அறிகுறி அவருக்குத் தென்பட்டது. அவர் சகோதரர் கமாய் ஜத்ரான் கூறும்போது, ஆப்கான் மருத்துவர்கள் உடனடியாக இந்தியாவுக்குக் கூட்டிச்செல்லுங்கள் என்று கூறியதாகத் தெரிவித்தார். இந்தியாவில் நல்ல செல்வாக்கும் தொடர்புமுடைய ரஷீத் கான் அவர் இந்தியா வந்து சிகிச்சை பெறுவதற்கு நிறைய உதவிகள் புரிந்துள்ளார்.

அவரது தம்பி கமாய் ஜத்ரான் கூறும்போது, “ஷபூரின் உடல் முழுதும் கிருமித் தொற்றுப் பரவிவிட்டது. எலும்புருக்கி நோயாகி மூளைக்கும் பரவியுள்ளது இந்தக் கிருமி. சில வாரங்கள் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அருகில் ஒரு விடுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்திருக்கிறார் ஜத்ரான்.

20 நாட்கள் தான் சரியாக இருந்துள்ளார் பிறகு மீண்டும் நோய்க் கிருமித் தொற்றுத் தாக்க மீண்டும் சிகிச்சை பிறகு மீண்டும் 20 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆனார். ஆனால் திடீரென வயிற்று வலி ஏற்பட இப்போது உடல்நிலை இன்னும் மோசமடைய டெல்லி மருத்துவமனையில் ஐசியுவில் உயிருக்குப்போராடி வருகிறார். அவருக்கு டெங்கு காய்ச்சலும் உள்ளது. அவரது நோயெதிர்ப்புச் சக்தி மிகவும் பலவீனமடைந்துள்ளது. ரத்தத்தின் சிவப்பணுக்கள் கடுமையாகக் குறைந்துள்ளது.

மார்ச் 26-ம் தேதி வாக்கில் அவருக்கு எலும்பு மஜ்ஜை பரிசோதனை நடத்தியதில் ஹெச்.எல்.எச். நோய் அதன் 4ம் கட்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இப்போதைக்கு தூங்கிக் கொண்டே இருக்கிறார் ஷபூர் என்கிறார் அவரது தம்பி.

பேச்சு முற்றிலும் இல்லை. 14 கிலோ எடை குறைந்துள்ளார். சமீபகாலங்களில் கொடுக்கப்பட்டு வரும் ஸ்டிராய்ட்கள் வேலை செய்கின்றன. இது ஒன்றுதான் நம்பிக்கை அளிக்கிறது என்கிறார் கமாய் ஜத்ரான்.

SCROLL FOR NEXT