விளையாட்டு

ஷுப்மன் கில்லுக்கு இன்று உடற்தகுதி சோதனை: பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் தகவல்

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ராக கொல்​கத்தா ஈடன் கார்​டனில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யின் 2-வது நாளில் பேட்​டிங் செய்த போது இந்​திய கிரிக்​கெட் அணி​யின் கேப்ட​னான ஷுப்​மன் கில்​லுக்கு கழுத்து பகு​தி​யில் சுளுக்கு ஏற்பட்​டது. இதன் பின்​னர் அவர், களமிறங்​க​வில்​லை. அந்த போட்டி​யில் இந்​திய அணி 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்த நிலை​யில் கடந்த சில நாட்​களாக நடை​பெற்ற பயிற்சியிலும் ஷுப்​மன் கில் கலந்​து​கொள்​வில்​லை.

எனினும் 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி நடை​பெறும் குவாஹாட்​டிக்கு இந்​திய அணி​யினருடன் ஷுப்​மன் கில் பயணம் செய்​துள்​ளார். நேற்று பார்​ப​சாரா மைதானத்​தில் இந்​திய அணி வீரர்​கள் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்​டனர். காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடை​யாத​தால் ஷுப்​மன் கில் பயிற்​சி​யில் ஈடுபடவில்​லை. இந்​நிலை​யில் ஷுப்​மன் கில்​லுக்கு இன்று மாலை உடற்​தகுதி சோதனை நடை​பெற உள்​ளது. இதன் பின்​னரே அவர், நாளை தொடங்​கும் 2-வது டெஸ்ட் போட்​டி​யில் கலந்துகொள்வாரா என்​பது தெரிய​வரும்.

இதுதொடர்​பாக இந்​திய கிரிக்​கெட் அணி​யின் பேட்​டிங் பயிற்சியாள​ரான சிதான்ஷு கோடக் கூறிய​தாவது: ஷுப்​மன் கில் காயத்​தில் இருந்து குணமடைந்து வரு​கிறார். 2-வது டெஸ்​டில் அவர், விளை​யாடு​வாரா என்​பது குறித்து வெள்​ளிக்​கிழமை (இன்று) மாலை முடிவு செய்​யப்​படும். ஏனென்​றால் ஷுப்​மன் கில் முழுமை​யாக குணமடைந்​தா​லும், போட்​டி​யின் போது மீண்​டும் சுளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்​ளதா என்​பதை மருத்​து​வர்​கள் கண்டறிந்து முடிவை தெரி​விப்​பார்​கள்.

இதில், ஏதேனும் சந்​தேகம் ஏற்​பட்​டால் ஷுப்​மன் கில் மேலும் ஒரு போட்​டி​யில் பங்​கேற்​காமல் ஓய்​வெடுப்​பார். அவர் போன்ற ஒரு வீரரை​யும், கேப்​டனை​யும் எந்த அணி​யாக இருந்​தா​லும் மிஸ் செய்​யவே செய்​யும். ஷுப்​மன் கில் விளை​யாட வேண்​டும் என்று நாங்​கள் அனை​வரும் விரும்​பு​கிறோம். ஆனால் அவர், விளையாடவில்லை என்​றால், நிச்​சய​மாக சிறந்த மாற்று வீரரை களமிறக்​கு​வோம். அவர், சதம்​கூட அடிக்​கலாம். கடந்த ஆட்டத்தில் ஷுப்​மன் கில் 2 இன்​னிங்​ஸிலும் பேட் செய்​யாதது குறித்து விவாதிக்கவில்லை.

2-வது இன்​னிங்ஸ் முக்​கியமில்​லாமல் இருந்​திருக்​கலாம். ஆனால் முதல் இன்​னிங்​ஸில் அவர், சிறந்த பார்ட்​னர் ​ஷிப்​புடன் 100 ரன்கள் முன்​னிலை பெற்​றுக் கொடுத்​திருந்​தால் நாங்​கள் சிறந்த நிலை​யில் இருந்​திருப்​போம். அது ஒரு சாக்​குப் ​போக்கு அல்ல, ஆனால் அவர், இரண்டு இன்​னிங்​ஸ்​களி​லும் பேட்​டிங் செய்ய முடியாமல் போனது. இவ்​வாறு சிதான்ஷு கோடக் கூறி​னார்.

ஷுப்​மன் கில் முழு​மை​யாக குணமடைய 10 நாட்​கள் தேவைப்படும் என கூறப்​படு​கிறது. ஒரு​வேளை அவர், குவாஹாட்டி டெஸ்​டில் விளை​யாடி​னால் நவம்​பர் 30-ம் தேதி ராஞ்சி​யில் தொடங்​கும் ஒரு​நாள் போட்​டித்​ தொடரில்​ அவருக்​கு ஓய்​வு வழங்கப்படக்கூடும்.

ஒரு தலைபட்சமாக விமர்சிக்கக்கூடாது: சி​தான்ஷு கோடக் கூறும்​போது, “அனை​வரும் தலை​மைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்பீர் மீதே குறை கூறுகின்​றனர். ஒருதலைபட்​ச​மாக அவரை விமர்சிப்​பதை ஏற்​றுக் கொள்ள முடி​யாது. சிலர் கவுதம் கம்​பீர் மீது பழி சுமத்த வேண்​டும் என்​பதை குறிக்​கோளாகக் கொண்டு விமர்சிப்​ப​தாக நினைக்​கிறேன். இவ்​வாறு விமர்​சிப்​பது மிக​வும் மோச​மானது.

இந்​திய அணி வீரர்​கள் விளை​யாடிய விதம் குறித்து ஏன் யாரும் எந்​தவொரு கேள்​வி​யும் கேட்​க​வில்​லை. பேட்​ஸ்​மேன்​கள் மீது விமர்​சனங்​கள் முன்​வைக்​கப்​ப​டா​மல் தலை​மைப் பயிற்​சி​யாளரை குறி​வைத்தே விமர்​சனங்​கள் முன்​வைக்​கப்​படு​வது ஆச்சரி​யம் அளிக்​கிறது. ஆடுகள பரா​மாரிப்​பாளர்​கள் மீது பழிசுமத்​தக் கூடாது என்​ப​தற்​காக கடந்த போட்​டி​யில் ஏற்​பட்ட தோல்விக்​கான அனைத்​துப் பழிகளை​யும் கவுதம் கம்​பீர் தன் மீது சுமத்​திக் கொண்​டார்​” என்​றார்​.

SCROLL FOR NEXT