வெலிங்டன்: இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
முதல் போட்டி நாளை (19-ம் தேதி) அதிகாலை 3.30 மணிக்கு வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் தொடங்குகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்தத் தோல்விக்கு இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
மேலும், 2025-2027-ம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி புள்ளிப் பட்டியலில் முன்னேற இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் தற்போது நியூஸிலாந்து 72.22 சதவீதத்துடன் முதலிடத்திலும் இந்திய அணி 51.52 சதவீதத்துடன் 4-வது இடத்திலும் உள்ளன.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு ஜஸ்பிரித் பும்ராவின் வருகை மிகப்பெரிய பலமாக அமையக்கூடும். நியூஸிலாந்து ஆடுகளங்களில் வேகம், பவுன்ஸ் மற்றும் ஸ்விங் ஆகியவற்றை சிறப்பாகப் பயன்படுத்தக்கூடிய திறன் கொண்டவர் பும்ரா. அவருடன் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, அன்ஷுல் கம்போஜ், குர்னூர் பிரார் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் கைகொடுக்க உள்ளனர்.
ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சுழற்பந்து வீச்சுடன் பேட்டிங்கிலும் பங்களிக்க முடியும். நிதிஷ் குமார் ரெட்டியும் ஆல்-ரவுண்டராக பலம் சேர்க்கக்கூடும்.
தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்து கொடுப்பது அவசியம். நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் ஸ்விங்கை எதிர்கொள்வதில் அவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டியிருக்கும். மிடில் ஆர்டரில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். உடற்தகுதி சான்று பெற்ற ரிஷப் பந்த் வெலிங்டனில் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அதிரடி பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய அவர், முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடும்.
டாம் லாதம் தலைமையிலான நியூஸிலாந்து அணி அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் களமிறங்குகிறது. டெவன் கான்வே, டாம் பிளண்டெல், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக உள்ளனர்.
பந்துவீச்சில் மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி, நாதன் ஸ்மித், பிளேர் டிக்னர் ஆகியோர் தங்களது சீரான வேகத்தால் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ் ஆகியோரும் அணியின் பேட்டிங் மற்றும் ஆல்ரவுண்டர் வாய்ப்புகளை அதிகரிக்கின்றனர். இதில் கான்வே, பிளண்டெல், ரவீந்திரா ஆகியோர் இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை. இதனால் அவர்கள் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.