

சென்னை: ‘தமிழகத்தின் தத்துப் பிள்ளையான தோனி சென்னைக்கு வெறும் கோப்பைகளை மட்டுமே வழங்கவில்லை. அவர் கிரிக்கெட்டையும் தாண்டிய ஒரு பிணைப்பை நமக்கு அளித்தார்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தோனி சென்னைக்கு வெறும் கோப்பைகளை மட்டுமே வழங்கவில்லை; அவர் பல தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஓர் உணர்வையும், கிரிக்கெட்டையும் தாண்டிய ஒரு பிணைப்பையும் நமக்கு அளித்தார்.
சொல்லப்போனால், நல்ல விஷயங்கள் யாவும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரத்தான் வேண்டும். தமிழ்நாட்டின் தத்துப்பிள்ளையான அவருக்கு, அவர் உண்மையிலேயே தகுதியான அந்த விடைபெறும் தருணத்தை வழங்க, எங்களுக்கு இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
எம்.எஸ்.தோனி எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களுக்கும், அற்புதமான வெற்றிகளுக்கும், என்றும் நிலைத்திருக்கும் நினைவுகளுக்கும் நன்றி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராகத் தொடங்கும் உங்கள் புதிய பயணத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக எம்.எஸ்.தோனி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2027 ஐபிஎல் சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவார் என்பதை அந்த அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய வீரர். ஒரு புதிய பொறுப்பு, என்றென்றும் நீடிக்கும் பிணைப்பு. மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 'ஆலோசகர்' (Team Mentor) பொறுப்பை ஏற்கிறார்.
எண்ணற்ற வெற்றிகள், சவாலான காலங்கள் மற்றும் நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும் நினைவுகள் என நமது பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே எம்.எஸ்.தோனி சிஎஸ்கே அணியின் மையப்புள்ளியாக இருந்து வருகிறார்.
அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது முதல், அடுத்த தலைமுறை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு வழிகாட்டுவது வரை, 'தல' எப்போதும் நமது அடையாளத்தின் ஓர் அங்கமாகவே இருப்பார். மேலும், சென்னை எப்போதும் அவருக்கு இல்லமாகவே இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.