ஃபின் ஆலன்
சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி முதல் வெற்றியை பெறுவதற்காக போராடி வருகிறது. 3 முறை சாம்பியனான அந்த அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3-ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது.
இந்நிலையில் கொல்கத்தா அணி இன்று சிஎஸ்கேவுடன் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான ஃபின் ஆலன் கூறியதாவது:
சில போட்டிகள் மட்டுமே முடிந்துள்ளன. இதை வைத்து அணியின் திறமை எதையும் முடிவு செய்ய முடியாது. தனிப்பட்ட முறையில், முதல் 2 போட்டிகளில் எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் இன்னிங்ஸை பெரிய அளவில் கட்டமைக்க முடியாமல் போனது. பெரிய இன்னிங்ஸை நான் விளையாடும் தூரம் வெகுதொலைவில் இல்லை என்று நம்புகிறேன்.
எங்களது பேட்ஸ்மேன்கள் களத்தில் நிலைத்து நின்று விளையாடுவதற்கும் அதிரடியாக விளையாடுவதற்கும் இடையிலான சரியான சமநிலையைக் கண்டறிய வேண்டும். கொல்கத்தாவில் நிலவும் வானிலை காரணமாக ஆடுகளம் வழக்கமாக இருப்பதைப் போல பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை. அந்த ஆடுகளத்தில் எது சிறந்த ஸ்கோராக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறோம்.
என்னுடைய பேட்டிங்கை பொறுத்தவரையில் பயிற்சி முறைகளில் கவனம் செலுத்தி வருகிறேன். சீரான மனநிலையை கடைபிடிக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் அதே மனநிலையுடன் களமிறங்குவதற்கான உத்வேகத்தைக் கண்டறியவும், அதை ஒவ்வொரு போட்டியிலும் அப்படியே பிரதிபலிக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். இவ்வாறு ஃபின் ஆலன் கூறினார்.