விளையாட்டு

‘உலகக் கோப்பை அரசன்’ எம்பாப்பே எழுச்சிக் கதை - கனவுகளுக்கு ‘முகவரி’ ஒரு தடையல்ல!

சு.சி.வீரகுந்தவை

உலகக் கோப்பை என்ற மேடை மிகச் சிறந்த வீரர்களைக் கூட சோதித்துப் பார்க்கும். ஆனால், அந்தச் சோதனைகளையே தனது அடையாளமாக மாற்றி, ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் புதிய வரலாறு எழுதும் வீரர்கள் மிக அரிது. அந்த அரிய பட்டியலில் இப்போது முன்னணியில் நிற்பவர் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே.

2018-ல் உலக சாம்பியனாக எழுந்தவர். 2022-ல் இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் அடித்தும் உலகையே வியக்க வைத்தவர். 2026 உலகக் கோப்பையிலும் பிரான்ஸின் நம்பிக்கையைத் தோளில் சுமந்து, கோல் மழை பொழிந்து, புதிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் வீரர்.

ஆனால், இன்று உலகம் கொண்டாடும் இந்த நட்சத்திரத்தின் கதை, ஆடம்பரமான கால்பந்து அகாடமியிலோ, செல்வச் செழிப்பான குடும்பத்திலோ தொடங்கவில்லை. மாறாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் ஓரத்தில், வாய்ப்புகளைவிட சவால்களே அதிகம் இருந்த ஒரு சாதாரண புறநகரில் தொடங்கியது.

பிரான்ஸில் தொடங்கிய கனவு

1998 டிசம்பர் 20 அன்று பிரான்ஸின் பாரிஸுக்கு வடகிழக்கே உள்ள பாண்டி (Bondy) என்ற சாதாரண புறநகர் பகுதியில் கால்பந்து பயிற்சியாளரான வில்ஃபிரெட் எம்பாப்பே மற்றும் ஃபய்ஸா லமாரி இணையருக்கும் மகனாக பிறந்தார் கிலியன் எம்பாப்பே லோட்டின். இன்று அந்தப் பகுதியை உலக வரைபடத்தில் அடையாளம் காட்டுவது, எம்பாப்பே என்ற பெயர்தான்.

ஆனால், அவர் பிறந்த காலத்தில் அந்தப் பகுதி அதிக வேலையின்மை, பொருளாதாரத்தில் பின்தங்கிய வாழ்க்கை முறை, சமூகப் பாகுபாடு மற்றும் குற்றச்செயல்கள் நடைபெறும் இடம் என பல எதிர்மறை அடையாளங்களுடனே இணங்காணப்பட்டது.

அங்கு பிறக்கும் குழந்தைகள் உலகக் கால்பந்தின் உச்சியை அடைவார்கள் என்று யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்தக் குழந்தைகளில் ஒருவன் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தான். இன்று அந்தப் பகுதியின் சுவர்களில் எம்பாப்பேவின் பிரம்மாண்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. “கனவுகளுக்கு முகவரி ஒரு தடையல்ல” என்பதற்கான அடையாளமாக அவர் மாறியிருக்கிறார்.

இன்று உலகக் கால்பந்தின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் எம்பாப்பேவின் கதை, உலகின் மிகப் பெரிய அரங்கில் தொடங்கவில்லை. வாய்ப்புகள் குறைவாக இருந்த ஒரு சாதாரண புறநகரில், பெற்றோரின் அணுகுமுறை, தியாகம், அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றோடு தான் அந்தப் பயணம் தொடங்கியது.

எம்பாப்பேவின் வாழ்க்கையில் முதல் பயிற்சியாளர் அவரது தந்தை வில்ஃபிரெட் எம்பாப்பே. ஏஎஸ் பாண்டி (AS Bondy) கிளப்பில் பயிற்சியாளராக இருந்த அவர், தனது மகனை மற்றவர்களை விட அதிகமாகக் கண்டித்தும், பொதுவெளியில் ஒருபோதும் பாராட்டாமலும் வளர்த்திருக்கிறார். ஏனெனில் சிறிய வயதிலேயே புகழ் தலைக்கேறினால் வளர்ச்சி நின்றுவிடும் என்று அவர் கருதினார்.

“கிலியனுக்கு கால்பந்தின் மீது ஆர்வம் மட்டும் இல்லை; அது அவனுக்கு ஒரு வெறி, சிறுவயதிலிருந்தே அதை சுவாசித்தான்” என்று வில்ஃபிரெட் பின்னர் கூறிய வார்த்தைகள், எம்பாப்பேவின் வாழ்க்கையை மிகச் சரியாக விளக்குகின்றன. அவரது தாய் ஃபைசா லமாரி, பிரான்ஸ் முதல் பிரிவு கையுந்துப் பந்து வீராங்கனையாக விளையாடியவர். வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பக்குவம், தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம், போட்டி மனப்பான்மை ஆகியவை தாயிடமிருந்தே எம்பாப்பேவுக்குக் கிடைத்தது.

சிறுவயதில் அவருக்கு வீட்டிலும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. வீட்டுக்குள் கால்பந்து விளையாடக் கூடாது, படிப்பை அலட்சியம் செய்யக் கூடாது, மொபைல், தொலைக்காட்சி பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடு, ஒவ்வொரு நாளும் கடுமையான பயிற்சிகள் என அவரது இளமைப் பருவம் அமைந்திருந்தது. இதன் காரணமாகவே அவர் திறமையான வீரராக மட்டுமல்லாமல் சிறுவயதிலிருந்தே ஒழுக்கத்தால் செதுக்கப்பட்ட மனிதனாகவும் வளர்ந்தார்.

பந்தை தலையணையாக்கி தூங்கிய சிறுவன்

பல குழந்தைகள் கால்பந்தை விரும்புவார்கள். ஆனால், எம்பாப்பே கால்பந்துக்காகவே வாழ்ந்தார். சிறுவயதில் கால்பந்தை தலையணையாக வைத்துத்தான் தூங்குவார் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். பள்ளிக்குச் சென்றாலும் கால்பந்துதான், பயிற்சி முடிந்தாலும் கால்பந்துதான்.

வீட்டுக்கு வந்தாலும் தொலைக்காட்சியில் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களின் போட்டிகளைப் பார்ப்பது, அவர்கள் எப்படி ஓடுகிறார்கள், முடிவெடுக்கிறார்கள், எப்போது பாஸ் செய்கிறார்கள் என்பதை கவனித்துக் கொண்டிருப்பது எம்பாப்பேவின் வழக்கம். ஆறு வயதிலேயே ஒரு தொழில்முறை வீரரைப் போல சிந்திக்கத் தொடங்கியிருந்தார்.

ஒரு தவறான பாஸ்... எதிர்காலத்தை மாற்றிய முடிவு

சிறுவயதில் நடந்த ஒரு சம்பவம், எம்பாப்பே ஏன் இன்று உலகத் தர வீரராக இருக்கிறார் என்பதைச் சொல்கிறது. ஏஎஸ் பாண்டி (AS Bondy) அணிக்காக விளையாடிய ஒரு போட்டியில், கோல் அடிக்க மிக எளிதான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது, “உன் பலவீனமான இடது காலையும் பயன்படுத்திக் கற்றுக்கொள்” என்று பயிற்சியாளர் கூறிய வார்த்தை நினைவுக்கு வந்தது.

எளிதாக கோல் அடிக்காமல், இடது காலால் நீண்ட பாஸ் கொடுக்க முயன்றார். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும் எதிர்காலத்தில் முழுமையான வீரராக மாறுவதற்கான ஒரு படியை அன்று அவர் வென்றார். உடனடி வெற்றியை விட, நீண்டகால வளர்ச்சியைத் தேர்வு செய்த மனநிலையே பின்னர் எம்பாப்பேவை உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக மாற்றியது.

2013 வரலாற்றை மாற்றிய முடிவு

எம்பாப்பேவின் திறமை, ஐரோப்பாவின் முன்னணி கிளப்களின் கவனத்தை மிகவும் சிறிய வயதிலேயே ஈர்த்தது. ரியல் மாட்ரிட், செல்சி போன்ற கிளப்புகள் அவரை நேரில் அழைத்து தங்களது பயிற்சி மையங்களைச் சுற்றிக்காட்டின. பிரெஞ்சு ஜாம்பவான் ஜினெடின் ஜிடேன் நேரடியாக அவரை வரவேற்று பயிற்சி மைதானத்தை காட்டிய சம்பவம் இன்றும் பேசப்படுகிறது.

அதேபோல், தனது சிறுவயது ஹீரோவான கிறிஸ்டியானோ ரொனால்டோவை சந்தித்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலானது. பல குடும்பங்கள் அந்த நேரத்தில் பெரிய கிளப்பைத் தேர்வு செய்திருப்பார்கள். ஆனால், எம்பாப்பேவின் குடும்பம் வேறு மாதிரி யோசித்தது. பெரிய கிளப்பின் பெஞ்சில் அமர்வதைவிட, திறமைக்கு வாய்ப்பு கிடைக்கும் இடமே முக்கியம் என்று அவர்கள் நம்பினார்கள். அதனால்தான் 2013-ல் ஏஎஸ் மொனாக்கோ (AS Monaco) அகாடமியைத் தேர்வு செய்தனர். அந்த முடிவு பின்னாளில் உலகக் கால்பந்தில் எம்பாப்பேவின் வரலாற்றை மாற்றியமைத்தது.

16 வயதில் தொழில்முறை அறிமுகம்

2015 டிசம்பர் 2, அன்று 16 வயது மட்டுமே ஆன எம்பாப்பே, மொனாக்கோவின் முதல் அணிக்காக களமிறங்கினார். அந்தப் போட்டியில் 1994 முதல் மொனாக்கோவின் இளம் அறிமுக வீரர் என்ற தியெரி ஹென்றியின் சாதனையை முறியடித்தார். அப்போது உலகம் அவரை ‘எதிர்கால நட்சத்திரம்’ என்று அழைத்தது. ஆனால், இன்னும் ஓர் ஆண்டில் அந்தப் பெயரே மாறப்போகிறது என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

உலகக் கோப்பையின் மனிதன்

2018 உலகக் கோப்பையில் 19 வயதிலேயே பிரான்ஸை சாம்பியனாக்கிய எம்பாப்பே, ஒரு நட்சத்திரமாக மாறினார். ஆனால் 2022 உலகக் கோப்பையில் அவரொரு தலைமுறையின் முகமாக உயர்ந்தார். கத்தாரில் நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிராக அவர் அடித்த ஹாட்ரிக், உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றிலேயே மிகச் சிறந்த தனிநபர் செயல்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்த ஆட்டத்தில் பிரான்ஸ் கோப்பையை இழந்தாலும், மிகப் பெரிய மேடையில் அழுத்தம் அதிகரிக்கும்போதுதான் எம்பாப்பே இன்னும் சிறப்பாக விளையாடுகிறார் என்று ரசிகர்கள் உணர்ந்தனர்.

2026 உலகக் கோப்பையிலும் அதையே நிரூபித்தார். குழுநிலை சுற்றில் செனகல், ஈராக், நார்வே ஆகிய அணிகளுக்கு எதிரான வெற்றிகள், நாக்-அவுட் சுற்றில் ஸ்வீடன், பராகுவே, மொராக்கோ ஆகிய அணிகளை வீழ்த்தி பிரான்ஸ் அரையிறுதிக்குள் நுழைந்தது. அந்தப் பயணங்களின் மையத்தில் மீண்டும் இருந்தவர் எம்பாப்பேதான்.

ஆறு போட்டிகளில் 8 கோல்கள், 2 அசிஸ்ட்கள் என கோல்டன் பூட் போட்டியில் முன்னிலையில் இருப்பதோடு, 1966-ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி இரண்டு வெவ்வேறு உலகக் கோப்பைகளில் (2022, 2026) தலா 10-க்கும் மேற்பட்ட நேரடி கோல் பங்களிப்புகளை செய்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

உலகக் கோப்பை வரலாற்றில் 20 கோல்களை பதிவு செய்த வீரராகவும் உயர்ந்தார். சில ஸ்பானிஷ் ஊடகங்கள் அவரை ‘El Señor del Mundial’ (உலகக் கோப்பையின் அரசன்) என்று வர்ணித்தன.

கனவை தாமதப்படுத்திய பாரிஸ்... நிறைவேற்றிய மாட்ரிட்!

2017-இல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மன் (PSG) அணியில் இணைந்தபோது, பிரான்ஸின் தலைநகருக்கு முதல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. உலக கால்பந்தின் மிகப் பெரிய கிளப்பான ரியல் மாட்ரிட் பலமுறை அழைத்தும், அவர் பாரிஸிலேயே தொடர்ந்தார். லியோனல் மெஸ்ஸி, நெய்மர் போன்ற நட்சத்திரங்கள் விலகிய பிறகு, முழு அணியின் சுமையையும் தனது தோள்களில் சுமந்தார். ஆனால் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு கனவு இருக்கும். அதுபோல எம்பாப்பேவுக்கான கனவாக ரியல் மாட்ரிட் இருந்தது.

சிறுவயதில் அவரது அறை முழுவதும் ரியல் மாட்ரிட் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போஸ்டர்களால் நிரம்பியிருந்தது. 14 வயதில் ஜினடின் ஜிடேன் அவரை மாட்ரிட்டுக்கு அழைத்து சென்று பயிற்சி மைதானத்தைச் சுற்றிக்காட்டிய சம்பவம், அந்தக் கனவை இன்னும் ஆழமாக விதைத்தது.

அதனால்தான் 2024-இல் அவர் ரியல் மாட்ரிட்டில் இணைந்தது ஒரு சாதாரண கிளப் மாற்றமாக பார்க்கப்படாமல் பல ஆண்டுகளாக காத்திருந்த ஒரு கனவு நிறைவேறிய தருணமாக கொண்டாடப்பட்டது. ஸ்பானிஷ் மொழியை முன்கூட்டியே கற்றுக்கொண்டது, புதிய சூழலுக்கு ஏற்ப மிக வேகமாக செயல்பட்டது, வினிசியஸ் ஜூனியர், ஜூட் பெல்லிங்காம் போன்ற வீரர்களுடன் இணைந்து விளையாடியது போன்றவை அவரது தொழில்முறை அணுகுமுறைக்கு சான்றாக அமைந்தன.

நுட்பமான சிந்தனையாளர்…

எம்பாப்பேவை வேகமான வீரர் என்று மட்டும் சொல்வது, அவரது முழு திறமையை சுருக்கிவிடும். மணிக்கு சுமார் 38 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டவர். ஆனால் அவரது உண்மையான பலம் என்னவெனில், எப்போது ஓட வேண்டும், எந்த இடைவெளியில் நுழைய வேண்டும், ஒரு வினாடிக்குள் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கணிக்கும் அவரது கால்பந்து அறிவுதான்.

லியோனல் மெஸ்ஸி ஆட்டத்தின் வேகத்தை கட்டுப்படுத்துவார், கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி பாக்ஸில் ஆட்டத்தை முடிப்பார், எர்லிங் ஹாலண்ட் கோல்களை வேட்டையாடுவார், ஆனால் எம்பாப்பேவோ எதிரணியின் பாதுகாப்பை ஒரே ஓட்டத்தில் சிதைக்கும் ட்ரான்ஸிஷன் ஃபார்வர்டு (Transition Forward) பந்தை எடுத்துக்கொண்டு தானாகவே தாக்குதலை உருவாக்கும் திறன் கொண்ட முழுமையான நவீன தாக்குதல் வீரராகவும் திகழ்கிறார். அதனால்தான் உலகின் சிறந்த பயிற்சியாளர்களும், முன்னாள் ஜாம்பவான்களும் அவரை எதிர்கால கால்பந்தின் முழுமையான முகமாக பார்க்கிறார்கள்.

விமர்சனங்களுக்கான பதில்…

ஒரு காலத்தில் அவர் அகங்காரமாக நடந்து கொள்கிறார் என்று விமர்சிக்கப்பட்டது, PSG ஒப்பந்த சர்ச்சைகள், கிளப் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகள், 2020 யூரோவில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக தவறவிட்ட பெனால்டி என அனைத்தும் அவரை கடுமையாக தாக்கின. ஆனால் அவர் பதிலளித்தது சமூக வலைதளங்களில் அல்ல. மாறாக 2022 உலகக் கோப்பையில் கோல்டன் பூட் வென்றார், ரியல் மாட்ரிட்டில் இணைந்ததும் கோல்களை மழையாக்கினார், 2026 உலகக் கோப்பையில் மீண்டும் சாதனைகளை உடைத்தார். விமர்சனங்களுக்கு அவர் எழுதும் பதில்கள் ஒவ்வொன்றும் கோல்கலாகவும், வெற்றிலாகவும் அமைந்தன.

கால்பந்துக்கு அப்பாலும் பொறுப்புகள்

கால்பந்து மட்டுமல்ல, சமூகத்துக்கும் தனது வெற்றியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் எம்பாப்பே உறுதியாக இருக்கிறார். இன்ஸ்பிரட் பை கேஎம் (Inspired by KM) என்ற தனது அறக்கட்டளை மூலம் பாரிஸைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100 குழந்தைகளுக்கு கல்வி, மொழிப் பயிற்சிகள், விளையாட்டு முகாம்கள், வெளிநாட்டு கலாச்சார சுற்றுப்பயணங்கள் போன்ற வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்புடன் தனது இமேஜ் உரிமைக்காக போராடியதும், இளைஞர்களுக்கு தவறான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சில விளம்பரங்களை நிராகரித்ததும், அவர் ஒரு கால்பந்து வீரரைத் தாண்டிய சமூகப் பொறுப்புள்ள நபராகவும் இருப்பதை காட்டுகிறது.

கால்பந்து உலகின் அடுத்த சகாப்தம்

1998-ல் பாரிஸின் புறநகரில் பிறந்த ஒரு சிறுவன், 2015-ல் தொழில்முறை கால்பந்தில் அறிமுகமானான். 2018-ல் உலக சாம்பியனானான். 2022-ல் உலகக் கோப்பை இறுதியில் ஹாட்ரிக் அடித்து வரலாறு படைத்தான். இன்று 2026 உலகக் கோப்பையிலும் புதிய சாதனைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான். இந்தப் பயணத்தில் மாறாத ஒன்று என்னவெனில், வெற்றியை நோக்கி ஓடும் அவனது வேகமட்டுமல்ல தன்னை தினமும் நேற்றைவிட சிறந்த வீரனாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற தீராதப் பசியும் கூட.

அதனால்தான் கிலியன் எம்பாப்பே வெறும் உலகத் தரம் வாய்ந்த வீரராக மட்டுமல்லாமல், கால்பந்து எந்த திசையில் பயணிக்கிறது என்பதை தனது கால்களால் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு தலைமுறையின் அடையாளமாகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார். சில வீரர்கள் வரலாற்றைப் படிப்பார்கள். சிலர் வரலாற்றைப் படைப்பார்கள். ஆனால், கிலியன் எம்பாப்பே வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தையே எழுதிக் கொண்டிருக்கிறார்.

SCROLL FOR NEXT