வாஷிங்டன்: ஃபிபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை 2026-க்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2026-ம் ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. தகுதி சுற்றின் வழியாக இதுவரை 42 அணிகள் தேர்வாகி உள்ளன. மீதம் உள்ள 6 அணிகள் பிளே ஆஃப் சுற்றின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த பிளே ஆஃப் சுற்றில் 22 அணிகள் மல்லுக்கட்ட உள்ளன. இதில் இருந்து முன்னேறும் 6 அணிகள் மார்ச் 31-ம் தேதிக்குள் தெரிந்துவிடும்.
இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து இந்த தொடரில் எந்தெந்த அணிகள் எந்த பிரிவில் இடம் பெற வேண்டும் என்பதற்கான குலுக்கல் தேர்வு மற்றும் போட்டி அட்டவணை வெளியீடு நிகழ்ச்சி நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. இதன்படி தொடரில் கலந்து கொள்ளும் 48 அணிகளும் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.
2026-ம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடைபெற உள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் என 12 பிரிவுகளில் இருந்தும் 24 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்த 24 அணிகளுடன் லீக் சுற்றில் 3-வது இடம் பிடித்த அணிகளுள் 8 சிறந்த அணிகளும் இணையும். கால் இறுதி சுற்று முதல் இறுதிப் போட்டி வரை உள்ள அனைத்து ஆட்டங்களும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஜூலை 19-ம் தேதி இறுதிப் போட்டி நியூ ஜெர்ஸி நகரில் நடைபெறுகிறது.
நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி ‘ஜே’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. அர்ஜெண்டினா தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 16-ம் தேதி அல்ஜீரியாவுடன் மோதுகிறது.
அமெரிக்கா ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் பராகுவே, ஆஸ்திரேலியா அணிகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன் பிளே ஆஃப் சுற்றில் வெற்றி பெறும் துருக்கி, கோசோவோ, ருமேனியா, சுலோவேக்கியா ஆகிய அணிகளுள் ஏதேனும் ஒன்று இணையும். அமெரிக்கா தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 12-ல் பராகுவே அணியுடன் மோதுகிறது.
மெக்சிகோ ‘ஏ’ பிரிவில் உள்ளது. இதே பிரிவில் தென் ஆப்பிரிக்கா, கொரியா அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகளுடன் பிளே ஆஃப் சுற்றில் வெற்றி பெறும் செக் குடியரசு, டென்மார்க், அயர்லாந்து, வட மெசபடோனியா ஆகிய அணிகளுள் ஏதேனும் ஒன்று இணையும். மெக்சிகோ தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 11-ல் தென் ஆப்பிரிக்காவுடன் மோத உள்ளது.
கனடா ‘பி’ பிரிவில் உள்ளது. இதே பிரிவில் கத்தார், சுவிட்சர்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த அணிகளுடன் பிளே ஆஃப் சுற்றில் வெற்றி பெறும் ஒரு அணி இணையும். 5 முறை சாம்பியனான பிரேசில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து அணிகளும் உள்ளன. பிரேசில் தனது முதல் ஆட்டத்தில் மொராக்கோவுடன் மோதுகிறது.
உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயின் ‘ஹெச்’ பிரிவில் உள்ளது. இதே பிரிவில் கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே அணிகள் இடம் பெற்றுள்ளன. 4 முறை சாம்பியனான ஜெர்மனி ‘இ’ பிரிவில் உள்ளது. இதே பிரிவில் கியூரோசாவ், ஐவரி கோஸ்ட், ஈக்வேடார் அணிகளும் உள்ளன. 2 முறை சாம்பியனான பிரான்ஸ் அணி ‘ஐ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் செனகல், நார்வே அணிகளும் உள்ளன. இந்த அணிகளுடன் பிளே ஆஃப் சுற்றில் வெற்றி பெறும் அணியும் இணையும்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவை உள்ளடக்கிய போர்ச்சுகல் அணி ‘கே’ பிரிவில் உள்ளது. இதே பிரிவில் உஸ்பெகிஸ்தான், கொலம்பியா அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகளுடன் பிளே ஆஃப் சுற்றில் வெற்றி பெறும் அணியும் இணையும். போர்ச்சுகலும், அர்ஜெண்டினாவும் லீக் சுற்றில் தங்களது பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் பட்சத்தில் கால் இறுதி சுற்றில் மோத வாய்ப்பு உள்ளது.
1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து ‘எல்’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் குரோஷியா, கானா, பனாமா அணிகள் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியின் போது உலகக் கோப்பையை அறிமுகம் செய்த ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அமைதிக்கான விருதையும் வழங்கி கவுரவித்தார்.