லாஸ் ஏஞ்சல்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று காலை 6.30 மணிக்கு லால்ஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சோபி மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா, பராகுவே அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இது 32 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ஆட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. பயிற்சியாளர் பொச்செட்டினோவால் தேர்வு செய்யப்பட்டுள்ள 26 பேர்கொண்ட அமெரிக்க அணியில் இதற்கு முன்பு உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவமுள்ள 13 வீரர்களும், முதன்முறையாகக் களம் காணும் 13 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
உலகக் கோப்பைக்கான பயிற்சிகளில் அமெரிக்க அணி ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருந்தது. எனினும் அமெரிக்க அணி தற்போது ஃபார்மிற்குத் திரும்பி வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. கடந்த மே 31 அன்று சார்லட் நகரில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் செனகல் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா தோற்கடித்தது.
இதன் பின்னர் சிகாகோவில் நடைபெற்ற நட்புரீதியான ஆட்டத்தில், 4 முறை உலகக் கோப்பை சாம்பியனான ஜெர்மனியிடம் 2-1 எனத் தோற்றபோதிலும், அவர்களுக்கு ஈடுகொடுத்து மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது அமெரிக்க அணி.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பென்சில்வேனியாவின் செஸ்டர் நகரில் நடைபெற்ற நட்புரீதியான ஆட்டத்தில் பராகுவே அணிக்கு எதிராக அமெரிக்க அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
இதனால் உலகக் கோப்பை தொடரில் பராகுவே அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது அமெரிக்க அணி.
இந்த ஆண்டு உலகக் கோப்பையில் அணிகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்த்தப்பட்டது பராகுவே அணிக்கு சாதகமாக அமைந்தது. இதன் மூலம், 2010-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி உலகக் கோப்பைத் தொடரில் களம் காண்கிறது. 2010-ம் ஆண்டு தொடரில் பராகுவே அணி கால்இறுதி வரை முன்னேறியிருந்தது.