

டொராண்டோ: 23-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்று மெக்சிகோவில் கோலாகலமாக கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
இந்நிலையில் இன்று ‘நள்ளிரவு பி’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் தொடரை இணைந்து நடத்தும் கனடா, போஸ்னியா & ஹெர்சகோவினா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் நள்ளிரவு 12.30 மணிக்கு டொராண்டோவில் உள்ள பிஎம்ஓ ஃபீல்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
கனடா அணி சொந்த மண்ணில் களமிறங்குவதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள கனடா அணி 1986 மற்றும் 2022-ம் ஆண்டு உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி உள்ளது. இந்த இரு தொடர்களிலும் அந்த அணி லீக் சுற்றை கடந்தது இல்லை.
ஆனால், பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஷின் புரட்சிகரமான அணுகுமுறை, அந்த அணியின் மீது புதிய நம்பிக்கையை பாய்ச்சியுள்ளது. அவர் மே 2024-ல் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்துக்குள், கனடா அணி தங்களது கோபா அமெரிக்கா அறிமுகத் தொடரிலேயே அரையிறுதி வரை முன்னேறி அசத்தியிருந்தது.
இருப்பினும், உலகக் கோப்பை வெற்றிக்கான மார்ஷின் திட்டங்களுக்கு ஆரம்பத்திலேயே ஒரு முட்டுக்கட்டையாக, அணியில் காயம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகக் கோப்பையில் கனடா அணியின் வரலாற்றிலேயே முதலாவது கோலை அடித்தவரான கேப்டன் அல்போன்சோ டேவிஸ், கடந்த மாதம் பேயர்ன் முனிச் அணிக்காக சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் விளையாடியபோது தொடை பகுதியில் காயம் அடைந்தார்.
இதனால் அவர், தனது அணியின் தொடக்க ஆட்டத்தை வெளியில் இருந்தே பார்க்க வேண்டிய நிலை உள்ளது. மெக்சிகோவிலிருந்து கனடா அணிக்கு மாறியவரான மிட்பீல்டர் மார்செலோ புளோரஸின் கடந்த மே மாதம் ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து முற்றிலும் விலகியுள்ளார். அதே நேரத்தில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பின்கள வீரரான மோயிஸ் பொம்பிட்டோவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது உடற்தகுதியில் எதிர்பார்த்த அளவிலான முன்னேற்றம் இல்லை.
இது ஒருபுறம் இருக்க பல ஆண்டுகால ஏமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துடிக்கும் கனடா அணியின் முன்களத் தாக்குதலை வழிநடத்தும் சுமை, ஜோனாதன் டேவிட் மீது விழுந்துள்ளது. 39 கோல்களுடன் நாட்டின் வரலாற்றிலேயே அதிக கோல் அடித்த வீரராகத் திகழும் அவர், கனடா மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளையும் தாங்கி நிற்பவராக உள்ளார்.
‘டிராகன்ஸ்’ என்று அழைக்கப்படும் போஸ்னியா & ஹெர்சகோவினா அணிக்கு எதிராக இதுவரை கனடா மோதியது இல்லை. போஸ்னியா & ஹெர்சகோவினா அணி தகுதி சுற்று ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான இத்தாலி அணிக்கு எதிராக பெனால்டி ஷூட்-அவுட்டில் அசாத்திய திறனை வெளிப்படுத்தி 2-வது முறையாக உலகக் கோப்பைக்குள் நுழைந்திருந்தது. இதனால் கனடா அணிக்கு போஸ்னியா & ஹெர்சகோவினா அணி கடும் சவால் அளிக்கக்கூடும்.
2014-ம் ஆண்டு போஸ்னியா & ஹெர்சகோவினா அணி முதன்முறையாக உலகக் கோப்பையில் அறிமுகமானபோது விளையாடிய வீரர்களில், தற்போது அணியில் எஞ்சியிருக்கும் இரண்டே வீரர்களில் ஒருவரான முன்கள வீரர் எடின் டிஸெகோ கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று கணிக்கப்படும் இளம் வீரர்களை உள்ளடக்கிய போஸ்னியா & ஹெர்சகோவினா அணிக்கு இவரது இருப்பு முக்கியமானது. அந்த அணி வரலாற்றில் அதிக கோல்களை அடித்த சாதனையாளரான 40 வயதாகும் டிஸெகோவின் அனுபவமும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.