உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘இ’ பிரிவில் பங்கேற்கும் ஜெர்மனி, குராசாவோ, ஐவரி கோஸ்ட், ஈக்வேடார் ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி
பயிற்சியாளர்: ஜூலியன் நாகெல்ஸ்மான்
பிஃபா தரவரிசை: 10
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 1954, 1974, 1990, 2014-ம் ஆண்டு தொடர்களில் சாம்பியன்
கடைசி உலகக் கோப்பை: 2022-ம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேற்றம்
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 20
தகுதி பெற்ற விதம்: காயம் காரணமாக முன்னணி வீரர்கள் பலர் விளையாடாத போதிலும் ஜெர்மனி அணி தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. சீனியர் கோல் கீப்பரான மானுவல் நியூயர் கடைசி நேரத்தில் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். இது கூடுதல் பலம் சேர்க்கக்கூடும்.
நட்சத்திரங்கள்
ஜோசுவா கிம்மிச்: அணியின் கேப்டனும், 2 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்க வீரருமான ஜோசுவா கிம்மிச், வலது பக்கப் பின்வரிசை தடுப்பாட்டக்காரர் மற்றும் தற்காப்பு நடுகள வீரர் என இரண்டு நிலைகளிலும் விளையாடக்கூடிய பன்முகத் திறனைக் கொண்டவர். ஜெர்மனி அணிக்காக கிம்மிச் 107 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
ஜமால் முசியாலா: சிறந்த அட்டாக்கிங் நடுகள வீரரான 23 வயதான ஜமால் முசியாலா 2020 மற்றும் 2024 யூரோ கோப்பை போட்டிகளிலும், 2022 உலகக் கோப்பை போட்டியிலும் ஜெர்மனி அணிக்காக விளையாடியுள்ளார்.
ஃப்ளோரியன் விர்ட்ஸ்: உலகக் கோப்பையில் ஜெர்மனி அணியின் ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்துக்கு முக்கிய உந்துசக்தியாக விர்ட்ஸ் இருக்கக்கூடும்.
ஒட்டுமொத்த செயல் திறன்: 112 ஆட்டங்கள், 68 வெற்றி, 21 டிரா, 23 தோல்வி, 232 அடித்த கோல்கள், 130 வாங்கிய கோல்கள்
மோதல்
>> ஜூன் 14 vs குராசாவோ
>> ஜூன் 20 vs ஐவரி கோஸ்ட்
>> ஜூன் 25 vs ஈக்வேடார்
குராசாவோ
பயிற்சியாளர்: டிக் அட்வகாட்
பிஃபா தரவரிசை: 83
முதன்முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கிறது குராசாவோ. கரீபியன் தீவு நாடான குராசாவோவின் மக்கள் தொகை 1.50 லட்சம் மட்டுமே. இதன் வாயிலாக அந்த அணி உலகக் கோப்பை வரலாற்றிலேயே தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற சாதனையைப் படைத்துள்ளது.
தகுதி பெற்ற விதம்: வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு தகுதி சுற்றில் நேரடியாக 2-வது ரவுண்டில் பங்கேற்ற குராசாவோ ‘சி’ பிரிவில் பார்படாஸ், அருபா, செயின்ட் லூசியா மற்றும் ஹைதி ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அபாரமாக விளையாடி முதலிடம் பிடித்தது. தொடர்ந்து இறுதி சுற்றில் ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, பெர்முடா ஆகிய அணிகள் அடங்கிய குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்று அசாத்தியமான திறன்களை வெளிப்படுத்தி 3 வெற்றி, 3 டிராக்களுடன் 12 புள்ளிகள் பெற்று உலகக் கோப்பையில் முதன்முறையாக கால்பதித்தது.
நட்சத்திரங்கள்
லியாண்ட்ரோ பாகுனா: அணியின் கேப்டனும், குராசாவோ அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய முன்னணி வீரரான லியாண்ட்ரோ பாகுனா, இங்கிலாந்தின் முன்னணி லீக்கில் 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
ஜுனின்ஹோ பாகுனா: லியாண்ட்ரோ பாகுனாவின் தம்பியான ஜுனின்ஹோ, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் கால்பந்து தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்ட நடுகள வீரர் ஆவார். இவர், அணியின் கோல் வாய்ப்புகளை உருவாக்குவதிலும், கோல்களை அடிப்பதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
மோதல்
>> ஜூன்14 vs ஜெர்மனி
>> ஜூன் 20 vs ஈக்வேடார்
>> ஜூன் 25 vs ஐவரி கோஸ்ட்
ஈக்வேடார்
பயிற்சியாளர்: செபாஸ்டியன் பெக்கசேசி
பிஃபா தரவரிசை: 24
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 2022, கத்தார்
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 4
தகுதி பெற்ற விதம்: பைரன் காஸ்டிலோவின் பிறப்புச் சான்றிதழ் விவகாரம் காரணமாக, சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் 2026-ம் ஆண்டுக்கான தகுதிச் சுற்றில் ஈக்வடார் அணிக்கு 3 புள்ளிகளை அபராதமாக விதித்தது. இதனால் ஈக்வடார் அணி தகுதி சுற்றில் தனது பயணத்தை -3 புள்ளிகளுடன் தொடங்கியது. கடினமான தென் அமெரிக்க தகுதிச் சுற்றின் முடிவில் ஈக்வடார் அணி 29 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்து உலகக் கோப்பை தொடரில் கால் பதித்தது.
நட்சத்திரங்கள்
மொய்சஸ் கெய்செடோ: தற்காப்பு நடுகள வீரர்களில் மொய்சஸ் கெய்செடோ சிறப்பாக செயல்படக்கூடியவர். தனது கிளப் அணி மற்றும் தேசிய அணி ஆகிய இரண்டிற்குமே மிக முக்கியமான தூணாக விளங்குகிறார். 2025-ம் ஆண்டு செல்சியா அணி கிளப் உலகக் கோப்பையை வெல்ல கெய்செடோ உதவியாக இருந்தார்.
பியேரோ ஹின்காபி: 2021-ம் ஆண்டு தனது தேசிய அணியில் அறிமுகமானதில் இருந்து ஈக்வடார் நாட்டிற்காக 50 போட்டிகளில் விளையாடியுள்ளார் ஹின்காபி. 2025-26-ம் ஆண்டு பிரீமியர் லீக் சீசனுக்காக பேயர் லெவர்குசென் கிளப்பில் இருந்து லோன் ஒப்பந்த அடிப்படையில் ஆர்செனல் அணியில் இணைந்துள்ளார்.
ஒட்டுமொத்த செயல் திறன்: 13 ஆட்டங்கள், 5 வெற்றி, 2 டிரா, 6 தோல்வி, 14 அடித்த கோல்கள், 14 வாங்கிய கோல்கள்
மோதல்
>> ஜூன் 14 vs ஐவரி கோஸ்ட்
>> ஜூன் 20 vs குராசாவோ
>> ஜூன் 25 vs ஜெர்மனி
ஐவரி கோஸ்ட்
பயிற்சியாளர்: எமெர்ஸ் ஃபாயே
பிஃபா தரவரிசை: 33
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 2006, 2010, 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் லீக் சுற்றுடன் வெளியேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 2014, பிரேசில்
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 3
தகுதி பெற்ற விதம்: ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு தகுதி சுற்றில் ஐவரி கோஸ்ட் 10 ஆட்டங்களில் 8 வெற்றி, 2 டிராக்களுடன் 26 புள்ளிகளை குவித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. 10 தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் எதிரணி ஒரு கோல் கூட அடிக்க ஐவரி கோஸ்ட் வாய்ப்பளிக்கவில்லை.
நட்சத்திரங்கள்
நிக்கோலஸ் பெப்பே: ஆர்செனல் அணியின் முன்னாள் விங்கரான நிக்கோலஸ் பெப்பே, கடந்த மார்ச் 31-ல் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற நட்புரீதியிலான ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணி வெற்றி பெறுவதற்கான தீர்க்கமான கோலை அடித்தார். இந்த வெற்றி ஒட்டுமொத்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இவான் கெஸாண்ட்: பிரீமியர் லீக்கில் வலுவான மற்றும் பன்முகத் திறன் கொண்ட வீரராக விளங்கும் இவான் கெஸாண்ட், அணியின் தாக்குதல் ஆட்டத்துக்கு பலம் சேர்க்கக்கூடும்.
சைமன் அடிங்ரா: 24 வயதாகும் சைமன் அடிங்ரா, கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க கோப்பையை ஐவரி கோஸ்ட் அணி வென்றபோது ‘சிறந்த இளம் வீரர்’ விருதை வென்றிருந்தார்.
ஒட்டுமொத்த செயல் திறன்: 9 ஆட்டங்கள், 3 வெற்றி, 1 டிரா, 5 தோல்வி, 13 அடித்த கோல்கள், 14 வாங்கிய கோல்கள்
மோதல்
>> ஜூன் 14 vs ஈக்வேடார்
>> ஜூன் 20 vs ஜெர்மனி
>> ஜூன் 25 vs குராசாவோ