விளையாட்டு

நாக்-அவுட் சுற்றுக்கு நெதர்லாந்து தகுதி: துனிசியாவை 3-1 என்ற கணக்கில் சாய்த்தது

செய்திப்பிரிவு

கன்சாஸ் சிட்டி: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் குரூப் எஃப் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வென்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் கன்சாஸ் சிட்டியிலுள்ள ஆரோஹெட் மைதானத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடி கோலடிக்க முயன்றனர். ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டென்செல் டம்ஃப்ரீஸ் அபாயகரமான வகையில் பந்தை கோல் வலையை நோக்கிச் செலுத்தினார். இந்தப் பந்தை கோல் விழுவதிலிருந்து காப்பாற்ற துனிசியா கேப்டன் எல்லிஸ் ஸ்கிரி முயன்றார். ஆனால் பந்து, அவரது காலில் பட்டு சுய கோலாக மாறியது. இந்த சுய கோல் காரணமாக நெதர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி மேலும் ஒரு கோலடித்தது.

விர்ஜில் வான் டிஜிக் கடத்திக் கொண்டு வந்து தந்த பந்தை அழகான கோலாக மாற்றினார் நெதர்லாந்து வீரர் பிரையன் பிராபி. முதல் பாதி வரை 2-0 என்ற நிலையே நீடித்தது. ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் துனிசியா வீரர் ஹசம் மஸ்டவுரி ஒரு கோலடித்தார். ஆனால், அதற்கடுத்த 8-வது நிமிடத்திலேயே நெதர்லாந்து வீரர் ஜான் பால் வான் ஹெக்கே ஒரு கோலடித்து 3-1 என்ற கணக்கில் முன்னிலையை அதிகரித்தார். ஜான் பால் கோலடிக்க, டிஜ்ஜானி ரெஜிந்தர்ஸ் உதவினார்.

கார்னர் பகுதியிலிருந்து ரெஜிந்தர்ஸ் அனுப்பிய பந்தை, ஜான் பால் வான் ஹெக்கே கோல் வலைக்கு மிக அருகிலிருந்து தலையால் முட்டி கோலாக மாற்றினார். சர்வதேச கால்பந்து போட்டிகளில் அவர் அடிக்கும் முதல் சர்வதேச கோலாகும். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே நெதர்லாந்து 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் குரூப் எஃப் பிரிவில் நெதர்லாந்து அணி 2 வெற்றி, ஒரு டிராவுடன் மொத்தம் 7 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் பிரிவில் பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்த துனிசியா, தொடரிலிருந்து வெளியேறியது.

SCROLL FOR NEXT