டல்லாஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது. கேப்டனும் நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்ஸி 38 மற்றும் 90+5-வது நிமிடங்களில் அற்புதமாக கோல் அடித்து அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா அணி ‘ஜே’ பிரிவில் 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் லயோனல் மெஸ்ஸி அடித்த இரண்டு கோல்களின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் 38 வயதாகும் மெஸ்ஸி.
அவர், இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் 18 கோல்களை அடித்து, ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸின் (16 கோல்கள்) சாதனையை முறியடித்துள்ளார். அத்துடன் உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து ஆறு போட்டிகளில் கோல் அடித்த வீரார்களின் பட்டியலில் பிரான்சின் ஜஸ்ட் ஃபோன்டைன் (1958) மற்றும் பிரேசிலின் ஜெய்ர்சின்ஹோ (1970) ஆகியோருடன் தற்போது லயோனல் மெஸ்ஸியும் இணைந்துள்ளார்.
முன்னதாக, ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட்டார். இலக்கை நோக்கி மெஸ்ஸி அடித்த பந்து கோல் கம்பத்துக்கு இடது பக்கம் வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக பெனால்டி (4 முறை) வாய்ப்புகளைத் தவறவிட்ட வீரர் என்ற தேவையற்ற சாதனையையும் மெஸ்ஸியின் வசமானது.
கடந்த 3 உலகக் கோப்பை தொடர்களில் அவர், இதை நிகழ்த்தி உள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அர்ஜெண்டினா 2 ஆட்டங்களில் 5 கோல்களை அடித்துள்ளது. இந்த கோல்களையும் மெஸ்ஸியே அடித்துள்ளார். அதீத பார்மில் உள்ள அவரின், கோல் வேட்டை வரும் ஆட்டங்களில் தொடரக்கூடும்.