விளையாட்டு

பீலேயை பின்னுக்குத் தள்ளிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் - முக்கியத் தருணங்கள் @ FIFA WC 2026

ஆர்.முத்துக்குமார்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் நாக்-அவுட் சுற்றில் இங்கிலாந்து அணி கடும் போராட்டத்திற்குப் பிறகு காங்கோ ஜனநாயகக் குடியரசை (DR Congo) 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, கடைசி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது. இங்கிலாந்தின் வெற்றிக்கு நட்சத்திர ஸ்டிரைக்கர் ஹாரி கேன் அடித்த இரட்டை கோல்கள் முக்கிய காரணமாக அமைந்தன.

அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த ஆட்டம் காங்கோவின் உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் நாக்-அவுட் போட்டியாகும். போட்டி தொடங்கிய ஏழாவது நிமிடத்திலேயே பிரையன் சிபெங்கா, இங்கிலாந்து பாதுகாப்பின் குழப்பத்தைப் பயன்படுத்தி கோல் அடித்து காங்கோவை அதிர்ச்சி முன்னிலைக்கு கொண்டு சென்றார். ஜோர்டன் பிக்போர்டின் அருகிலிருந்த கம்பத்தை நோக்கி துல்லியமாக அடிக்கப்பட்ட அந்த ஷாட், இங்கிலாந்து ரசிகர்களை கொந்தளிக்கச் செய்தது.

அதன் பின்னர் இங்கிலாந்து தொடர்ந்து தாக்குதலை அதிகரித்தது. 30வது நிமிடத்தில் ஜூட் பெல்லிங்ஹாமின் ஹெடரை காங்கோ கோல்கீப்பர் லயோனல் மபாசி அபாரமாக தடுத்தார். 35வது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்போர்டின் ஷாட் கோல் கோட்டில் இருந்தே ஆரோன் வான்-பிசாக்காவால் தடுக்கப்பட்டது. முதல் பாதி முடிவதற்கு முன்பு யோயான் விஸ்ஸா அடித்த பந்து கம்பத்தில் பட்டு வெளியேறியதால் இங்கிலாந்து பெரிய ஆபத்திலிருந்து தப்பியது.

43வது நிமிடத்தில் ஹாரி கேன் பெனால்டி பகுதியில் காங்கோ கோல்கீப்பர் மபாசியுடன் ஏற்பட்ட தொடர்புக்குப் பிறகு கீழே விழுந்தார். ஆனால் நடுவர் அதை பெனால்டியாக வழங்காமல், கேன் டைவ் செய்ததாகக் கருதி தீர்ப்பளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கூடுதல் நேரத்தில் பெல்லிங்ஹாம் மற்றும் கேன் ஆகியோரின் முயற்சிகளையும் காங்கோ கோல் கீப்பர் மபாசி தடுத்து நிறுத்தி காங்கோவின் முன்னிலையை தன்னால் இயன்றவரை காப்பாற்றி வந்தார்.

இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தினாலும், மபாசியின் சிறப்பான சேவ்கள் தொடர்ந்து அவர்களை ஏமாற்றின. 53வது நிமிடத்தில் பெல்லிங்ஹாமின் அபாயகரமான முயற்சியையும் அவர் தடுத்தார். இருப்பினும், 75வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய ஆன்டனி கார்டனின் துல்லியமான கிராஸை ஹாரி கேன் அற்புதமாக தலையால் முட்டிக் கோலாக மாற்றி இங்கிலாந்துக்கு சமநிலையைப் பெற்றுத் தந்தார்.

போட்டி கூடுதல் நேரத்தை நோக்கி நகரும் என தோன்றிய நிலையில், 86வது நிமிடத்தில் கேன் மீண்டும் தனது முத்திரையைப் பதித்தார். காங்கோ பாதுகாப்பு வீரர்களின் நடுவே இடைவெளியை உருவாக்கிக் கொண்ட அவர், சக்திவாய்ந்த ஷாட்டை வலையின் மேற்கூரையை நோக்கி பாய்ச்சினார். அந்த அசத்தலான கோலைத் தடுக்க காங்கோவால் எந்த முயற்சியும் செய்ய முடியவில்லை.

இந்த இரட்டை கோல்களின் மூலம் ஹாரி கேன் உலகக் கோப்பை வரலாற்றில் தனது கோல் எண்ணிக்கையை 13 ஆக உயர்த்தி, பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை முந்தினார். மேலும், இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி கடைசி 16 சுற்றில் வலுவான, கடினமான மெக்சிகோ அணியை எதிர்கொள்கிறது.

கடினமான தருணங்களில் தனது அனுபவத்தையும் தரத்தையும் வெளிப்படுத்திய ஹாரி கேனின் சிறப்பான ஆட்டம், இங்கிலாந்தின் உலகக் கோப்பை கனவை உயிர்ப்புடன் தொடரச் செய்தது. காங்கோ கோல் கீப்பர் மபாசியின் அற்புத சேவ்கள் நீண்ட காலம் கண்களிலேயே நிற்கக் கூடியது.

இந்தப் போட்டியின் முக்கியத் தருணங்கள்:

7-வது நிமிடம் – கோல்!

அதிர்ச்சி தொடக்கம்! காங்கோ ஜனநாயகக் குடியரசின் பிரையன் சிபெங்கா, ஜோர்டன் பிக்ஃபோர்டை அவரது அருகிலுள்ள கம்பத்தின் பக்கமாக ஏமாற்றி கோல் அடித்து முன்னிலை பெற்றார்.

30-வது நிமிடம் – அபார சேவ்!

இங்கிலாந்தின் முதல் இலக்கு நோக்கிய முயற்சி. ஜூட் பெல்லிங்காமின் தலையால் அடிக்கப்பட்ட பந்தை லியோனல் ம்பாசி அற்புதமாக தடுத்து நிறுத்தினார்.

35வது நிமிடம்– கோல் கோட்டில் இருந்து மீட்பு!

ஆரோன் வான்-பிஸ்ஸாக்காவின் முயற்சிக்குப் பிறகு மார்கஸ் ராஷ்ஃபோர்டின் ஷாட் கோல் கோட்டிலேயே தடுக்கப்பட்டது.

42வது நிமிடம் – கம்பத்தில் பட்டது!

இங்கிலாந்துக்கு பெரிய அதிர்ஷ்டம். காங்கோ வீரர் யோனே விஸ்ஸா மிக அருகிலிருந்து அடித்த பந்து கம்பத்தில் மோதி வெளியேறியது.

43வது நிமிடம் – பெனால்டி இல்லை!

ஹாரி கேன் பெனால்டி பகுதியில் காங்கோ கோல் கீப்பர் மபாசியால் தடுக்கப்பட்டதாகத் தோன்றினாலும், நடுவர் அதனை ‘டைவிங்’ எனக் கருதி பெனால்டி வழங்க மறுத்தார்.

45+2வது நிமிடம் – மீண்டும் சேவ்!

நோனி மதுவேகேவின் கிராஸிலிருந்து வந்த பெல்லிங்காமின் ஹெடிங் முயற்சியையும் மபாசி தடுத்து நிறுத்தினார்.

45+6வது நிமிடம் – மபாசியின் மற்றொரு அற்புதம்!

ஹாரி கேனின் அருகிலுள்ள கம்பத்தை நோக்கிய ஷாட்டை ம்பாசி மீண்டும் தடுத்தார்.

53வது நிமிடம்– காங்கோவின் காவல்தெய்வம்!

பெல்லிங்காமின் திசைமாறிய கிராஸை ம்பாசி வேகமாக எதிர்வினையாற்றி சேவ் செய்தார்.

75வது நிமிடம் – இங்கிலாந்து சமம்:

ஆந்தனி கார்டனின் துல்லியமான கிராஸை ஹாரி கேன் தலையால் வலையில் செலுத்தி இங்கிலாந்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

86வது நிமிடம் – கோல்! இங்கிலாந்தின் மீள்பிறப்பு!

காங்கோ பாதுகாப்பை உடைத்து தனக்கான இடத்தை உருவாக்கிய ஹாரி கேன், தடுக்க முடியாத சக்திவாய்ந்த ஷாட்டால் வலையை கிழித்து இங்கிலாந்துக்கு வெற்றிக் கோலைப் பெற்றுத் தந்தார்.

SCROLL FOR NEXT