டொரண்டோ: பிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தியது. இதன்மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு ஜெர்மனி முன்னேறியது.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இ பிரிவில் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு டொரண்டோவில் உள்ள பிஎம்ஓ ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெர்மனி, ஐவரி கோஸ்ட் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் உற்சாகத்துடன் விளையாடினர். பலம்வாய்ந்த ஜெர்மனி அணி வீரர்களுக்கு ஈடுகொடுத்து ஐவரி கோஸ்ட் வீரர்கள் விளையாடினர்.
ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் கேப்டன் பிராங்க் கெஸ்ஸி ஒரு கோலடித்து ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்தார். சக வீரர் அனுப்பிய பாஸை ஐவரி கோஸ்ட் கேப்டன் ஃபிராங்க் கெஸ்ஸி சரியாக பயன்படுத்தி, கோல்கீப்பர் மானுவல் நோயரைத் தாண்டி பந்தை வலைக்குள் செலுத்தி தனது அணிக்கு முன்னிலையை அளித்தார். இதனால் 1-0 என்ற கணக்கில் முதல் பாதி வரை ஐவரி கோஸ்ட் முன்னிலையில் இருந்தது.
ஆட்டத்தின் 2-வது பாதியில் ஜெர்மனி அணி வீரர்கள் சுதாரித்து விளையாடினர். 2-வது பாதியில் ஜெர்மனி அணி ஒரு கோலடித்து 1-1 என்ற கணக்கில் சமநிலையை ஏற்படுத்தியது. முதல் கோலை அடிக்க ஜெர்மனி வீரர் நதீம் அமிரி உதவினார். நதீம் அமிரி பந்தை அழகாகக் கடத்திக் கொண்டு வந்து ஜெர்மனி வீரர் டெனிஸ் உண்டாவிடம் கொடுத்தார்.
ஐவரி கோஸ்ட்டின் கோல்கீப்பரைத் தாண்டி அழகான கோலாக மாற்றினார் டெனிஸ் உண்டாவ். 90 நிமிடங்கள் வரை 1-1 என்ற நிலையே நீடித்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் ஜெர்மனி அணி வீரர் டெனிஸ் உண்டாவ் மேலும் ஒரு கோலடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 93-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் பெலிக்ஸ் நெமேச்சா பந்தை பாக்ஸ் பகுதியை நோக்கி உதைத்தார்.
இதையடுத்து பாக்ஸ் பகுதிக்குள் நுழைந்த டெனிஸ் உண்டாவ், பந்தை அழகாகப் பெற்று வேகமாக உதைத்தார். அந்த பந்து கோல் வலையின் நடுப்பகுதியைத் துளைத்துக் கொண்டு சென்றது. இதையடுத்து 2-1 என்ற கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 2 இரண்டு ஆட்டங்களில் 6 புள்ளிகளைப் பெற்று ஜெர்மனி ‘குரூப் இ’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்ததுடன், 32 அணிகள் கொண்ட நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
அதே நேரத்தில், ஐவரி கோஸ்ட் 2 ஆட்டங்களுக்குப் பின்னர் 3 புள்ளிகளுடன் உள்ளது. தனது முதல் இரண்டு உலகக் கோப்பை ஆட்டங்களிலும் கோல் அடித்த ஜெர்மனியின் முதல் வீரராக டெனிஸ் உண்டாவ் திகழ்கிறார். இதற்கு முன் 2002-ம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.
மாற்று வீரராகக் களமிறங்கி ஐந்து கோல் பங்களிப்புகளை (கோல் அடித்தல் அல்லது கோல் அடிக்க உதவுதல்) வழங்கியதன் மூலம், 1966-க்குப் பிறகு ஒரே உலகக் கோப்பையில் மாற்று வீரராக அதிக கோல் பங்களிப்புகளை வழங்கிய ரோஜர் மில்லாவின் 1990-ம் ஆண்டு சாதனையையும் டெனிஸ் உண்டாவ் சமன் செய்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை சீசனில் ஜெர்மனியின் மாற்று வீரர்கள் மொத்தம் 6 கோல் பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.
மேலும், பிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்ற கோல்கீப்பர் என்ற சாதனையை ஜெர்மனி வீரர் மானுவல் நோயர் படைத்தார். பிரான்ஸின் ஹியூகோ லோரிஸைப் பின்னுக்குத் தள்ளி அவர் தனது 21-வது போட்டியில் விளையாடியுள்ளார்.
அதேநேரத்தில் ஐவரி கோஸ்ட் அணிக்காக கோல்அடித்த பிராங்க் கெஸ்ஸி, உலகக் கோப்பையில் கோல் அடித்த வயதான 2-வது வீரராகவும் திகழ்கிறார். அவருக்கு 29 வயது 183 நாட்களாகிறது. இவருக்கு முன்னதாக 2010-ல் 32 வயது 101 நாட்களில் கோல் அடித்த ஐவரி கோஸ்ட் வீரராக டிடியர் ட்ரோக்பா முதலிடத்தில் உள்ளார்.