பெல்லிங்காம் மற்றும் ஹாரி கேன்

 
விளையாட்டு

பெல்லிங்காம் அபாரம்: பரபரப்பான ஆட்டத்தில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதியில் இங்கிலாந்து! | FIFA WC 2026

ஆர்.முத்துக்குமார்

மெக்சிகோ நகரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை ரவுண்ட் -16 சுற்று ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து அணி மெக்சிகோ அணியை பரபரப்பான் ஆட்டத்தில் நெருக்கமாக 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதியில் நார்வேயை சந்திக்கிறது.

பெல்லிங்காமின் அபாரமான இரட்டை கோல்களினால் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 54வது நிமிடத்தில் அதன் தடுப்பு வீரர் ஜாரெல் கான்சா என்ற வீரர் மெக்சிகோவின் ஜீசஸ் கல்லார்டோவை தடுத்தாட்கொள்ள முற்பட்ட போது முறையற்ற விதத்தில் தடுத்ததால் ஃபவுல் என்று அறிவிக்கப்பட்டு நேரடியாக ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால் பின்னடைவு கண்டது. இதனால் இங்கிலாந்து 10 வீரர்களுடன் கடைசி வரை ஆட நேரிட்டது.

மெக்சிகோ நகரிலுள்ள புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டம் உலகக் கோப்பை தொடரின் சிறந்த போட்டிகளில் ஒன்றாகும். கடும் சூறைக்காற்று மற்றும் மின்னல் காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. 80,824 ரசிகர்கள் நிரம்பிய மைதானத்தில் மெக்சிகோ ஆதரவாளர்கள் கூச்சலில் இங்கிலாந்து கடும் நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் மெக்சிகோ வீரர் ரால் ஜிமெனேஸ் மேற்கொண்ட கோல் முயற்சியை இங்கிலாந்து கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்டு சிறப்பாக தடுத்தார். அதன்பின் ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது. டெக்லான் ரைஸ் தொடங்கிய தாக்குதலை புகாயோ சாகா சிறப்பான கிராஸாக மாற்ற, பாக்சிற்கு அருகே ஜூட் பெல்லிங்காம் தலையால் கோலுக்குள் செலுத்தினார். அட்டகாசமான ஒரு பினிஷிங்.

முதல் கோல் அடித்த 100 விநாடிகளிலேயே இங்கிலாந்து மீண்டும் தாக்கியது. எலியட் ஆண்டர்சன் பந்தை தன் வசமாக்கிய பிறகு ஆண்டனி கார்டன் மற்றும் ஹாரி கேன் இணைந்து உருவாக்கிய வாய்ப்பை பெல்லிங்காம் கோலாக மாற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடியா அமெக்சிகோ, யூலியன் குயினோனேஸ் மூலம் ஒரு கோலை திருப்பி அடித்து இடைவேளைக்கு முன் வித்தியாசத்தை குறைத்தது. மேலும் ஜிமினஸின் மற்றொரு முயற்சியையும் பிக்போர்ட் தடுத்து இங்கிலாந்தை காப்பாற்றினார்.

10 வீரர்களுக்க்குக் குறுக்கப்பட்ட இங்கிலாந்து தடுப்பாட்ட வலைக்குள் செல்லாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது ஆச்சரியமே. 60-வது நிமிடத்தில் ராவுல் ரேஞ்சல், கார்டனை பெனால்டி பகுதியில் கீழே தள்ளியதற்காக வழங்கப்பட்ட பெனால்டியை ஹாரி கேன் வெற்றிகரமாக கோலாக மாற்றி அணியின் முன்னிலையை 3-1 ஆக உயர்த்தினார்.

பின்னர் கேன் செய்த தவறால் மெக்சிகோவுக்கும் பெனால்டி கிடைத்தது. மாற்று வீரர் பிரையன் குட்டியரேஸ் மீது ஹாரி கேன் ஃபவுல் செய்ததைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பெனால்டியை ரவுல் ஜிமினேஸ் கோலாக மாற்றினார். இதனால் கணக்கு 3-2 ஆனது.

கடைசி கட்டத்தில் 11 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டதால் மெக்சிகோ சமநிலைக்காக கடுமையாக போராடியது. எனினும் இங்கிலாந்து வீரர்கள் உறுதியான தற்காப்பை வெளிப்படுத்தி வெற்றியை தக்க வைத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து உலகக் கோப்பை காலிறுதியில் நார்வே அணியை எதிர்கொள்ள உள்ளது. உயரமான நிலப்பரப்பு, மோசமான வானிலை, தாமதமான தொடக்கம் மற்றும் மெக்சிகோ ரசிகர்களின் கடுமையான அழுத்தம் உள்ளிட்ட பல சவால்களுக்கு மத்தியில், 10 வீரர்களுடன் 36 நிமிடங்கள் விளையாடி பெற்ற இந்த வெற்றி, வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்தின் மிகச் சிறந்த வெற்றிகளில் ஒன்றாகும். மெக்சிகோ தனது சொந்த மைதானத்தில் கடந்த 90 போட்டிகளில் சந்தித்த மூன்றாவது தோல்வியாகும் இது.

SCROLL FOR NEXT