மியாமி: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் குரூப் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியுடன் கொலம்பியா அணி டிரா செய்தது. இருந்தபோதும் இரு அணிகளும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.
இந்த ஆட்டம் மியாமியிலுள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே கோலடிக்க தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது முயற்சிகளை கோல்கீப்பர்கள் சிறப்பாக தடுத்தனர். ஆட்டம் முடியும் வரை இரு அணிகளுமே கோலடிக்கவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
குரூப் கே சுற்று லீக் ஆட்டங்களின் முடிவில் கொலம்பியா 7 புள்ளிகள், போர்ச்சுகல் 5, காங்கோ 4 புள்ளிகள் பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.
ரொனால்டோ சாதனை
கொலம்பியாவுடனான போட்டி ரொனால்டோவுக்கு 25-வது உலகக் கோப்பை போட்டியாக அமைந்தது. இதன்மூலம் அதிக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய 2-வது வீரர் என்ற சாதனையை ஜெர்மனி வீரர் லோத்தர் மத்தேயஸுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் ரொனால்டோ. இந்த பட்டியலில் மெஸ்ஸி 29 ஆட்டங்களில் பங்கேற்று முதலிடத்தில் உள்ளார்.
9 ஆப்பிரிக்க அணிகள்
இந்த உலகக் கோப்பையில் நாக்-அவுட் சுற்றுக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மொராக்கோ, தென் ஆப்பிரிக்கா, செனகல், ஐவரி கோஸ்ட், கானா, எகிப்து, அல்ஜீரியா, காங்கோ, கேப் வெர்டே ஆகிய 9 அணிகள் நாக்-அவுட் சுற்றில் தடம்பதித்துள்ளன. வெளியேறிய ஒரே ஒரு ஆப்பிரிக்க அணி துனிசியா மட்டுமே.