விளையாட்டு

நாக்-அவுட் சுற்றுக்கு கொலம்பியா முன்னேற்றம்: 1-0 என்ற கணக்கில் காங்கோவை சாய்த்தது | FIFA WC 2026

செய்திப்பிரிவு

ஜபோபான்(மெக்சிகோ): உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் கே பிரிவு லீக் ஆட்டத்தில் கொலம்பியா அணி வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 1-0 என்ற கோல் கணக்கில் காங்கோ அணியை கொலம்பியா சாய்த்தது.

இந்த லீக் ஆட்டம் நேற்று காலை 7.30 மணிக்கு மெக்சிகோவின் குவாடலஹாராவில் உள்ள எஸ்டாடியோ அக்ரான் மைதானத்தில் நடைபெற்றது. முதல் பாதி ஆட்டம் விறு விறுப்பாகவே அமைந்திருந்தது. ஆனால் கோல் எதுவும் விழவில்லை. காங்கோ அணி வீரர்களின் தற்காப்பு அரணை உடைக்க கொலம்பியா வீரர்கள் தீவிர முயற்சி செய்தும் நடைபெறவில்லை. முதல் பாதியின்போது காங்கோ வீரர் எடோ கயேம்பே நீண்ட தூரத்திலிருந்து கோல் கம்பத்தை நோக்கி உதைத்தார். ஆனால் பந்து விலகி வேறு திசையில் சென்றுவிட்டது.

இதைத் தொடர்ந்து கொலம்பியா வீரர் டேனியல் முனோஸ் சிறப்பாக செயல்பட்டு கோலடித்தார். ஆனால் அதை ஆப்-சைட் என்று நடுவர் அறிவித்தார்.முதல் பாதி வரை 0-0 என்ற நிலையிலே இருந்தது. 2-வது பாதி ஆட்டத்தின்போது இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோலடிக்க முயன்றனர். இதற்கு 76-வது நிமிடத்தில் நல்ல பலன் கிடைத்தது.

கொலம்பிய வீரர் ஜான் கோர்டோபா கடத்திக் கொடுத்த பந்தை சிறப்பாக கோல் வலையை நோக்கி அடித்தார் டேனியல் முனோஸ். அது காங்கோ கோல்கீப்பரை ஏமாற்றி கோல் வளையைத் துளைத்தது. இதனால் 1-0 என்ற கணக்கில் கொலம்பியா முன்னிலை பெற்றது. இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே கொலம்பியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

குரூப் கே பிரிவில் கொலம்பியா அணி 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளை குவித்த நிலையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக போர்ச்சுகல் அணி 4 புள்ளிகளுடன் உள்ளது. காங்கோ அணி ஒரே ஒரு புள்ளியுடன் உள்ளது. உஸ்பெகிஸ்தான் இன்னும் புள்ளிக் கணக்கைத் தொடங்கவில்லை.

SCROLL FOR NEXT