கன்ஹாஸ் சிட்டி: பிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் கால் இறுதிச் சுற்றில் அர்ஜெண்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
இந்த ஆட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்திலேயே அர்ஜெண்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் ஒரு கோலடித்து கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி, கார்னரிலிருந்து உதைத்த பந்தை தலையால் முட்டி அற்புதமான கோலாக்கினார் மேக் அலிஸ்டர். இதனால் 1-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலா, எதிரணி வீரரை இடறி விட்டதால் மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரிக்கப்பட்டார். முதல் பாதி வரை 1-0 என்ற நிலையே நீடித்தது. ஆனால் ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது சுவிட்சர்லாந்து. சுவிட்சர்லாந்து வீரர் ரிகார்டோ ரோட்ரிக்ஸ் கடத்திக் கொண்டு வந்த பந்தை, கோல் வலைக்குள் திணித்தார் டான் டோயே. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது.
72-வது நிமிடத்தின்போது சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலா மீண்டும் தவறு செய்ய, நடுவர் அவருக்கு சிவப்பு அட்டை காண்பித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. ஆட்டத்தின் இறுதி வரை அர்ஜெண்டினா வீரர்களின் கோலடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார் சுவிட்சர்லாந்து கோல்கீப்பர்.
90 நிமிடங்கள், காயத்துக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நிமிடங்கள் முடிந்தபோதும் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கிலேயே சமநிலையில் இருந்தன. இதையடுத்து கூடுதல் நேரம் தரப்பட்டது. இந்தக் கூடுதல் நேரத்தின்போது 2 கோல்களை அசத்தலாக அடித்து வெற்றியைச் சுவைத்தது அர்ஜெண்டினா அணி.
ஆட்டத்தின் 112-வது நிமிடத்தின்போது அர்ஜெண்டினா வீரர் ஜோஸ் மேனுவல் லோபஸ் கடத்தித் தந்த பந்தை, பாக்ஸுக்கு வெளியே இருந்து வேகமாக உதைத்தார் ஜூலியன் லோபஸ். இந்த பந்து, அதிவேகமாக கோல் வலையின் இடதுபுறத்தை துளைத்தது. இதையடுத்து 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது.
அதற்கடுத்த 8-வது நிமிடத்திலேயே மேலும் ஒரு கோலை அடித்தது அர்ஜெண்டினா. அந்த அணியின் லவ்டேரா மார்ட்டினெஸ் இந்த அழகான கோலை அடித்தார். இறுதி வரை சுவிட்சர்லாந்து வீரர்கள் போராடியும் கோலடிக்க முடியவில்லை. இதையடுத்து 3-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
நடுவருடன் மெஸ்ஸி வாக்குவாதம்
சுவிட்சர்லாந்துடனான கால் இறுதிப் போட்டியின்போது போர்ச்சுகலைச் சேர்ந்த நடுவர் ஜோவோ பெட்ரோவுடன் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோல் வளையத்தை நோக்கி மெஸ்ஸி வேகமாக அடித்த பந்தை சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் தடுத்துவிட்டார். இதனால் மெஸ்ஸி விரக்தியில் இருந்தார். அப்போது களத்திலிருந்த நடுவர் பெட்ரோவுடன், மெஸ்ஸி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தடுப்பாட்ட அரண் கோட்டுப் பகுதியில் நின்று கொண்டிருந்த மெஸ்ஸியை, பின்னால் செல்லுமாறு நடுவர் கூறியதால் மெஸ்ஸி கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது மெஸ்ஸி போர்ச்சுகல் நடுவரிடம், "என்னிடம் ஒழுங்காக பேசுங்கள். என்னை அவமதிக்காதீர்கள். நான் உங்களிடம் ஒழுங்காகத்தான் பேசினேன்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கோலடிக்காத மெஸ்ஸி
சுவிட்சர்லாந்துடனான நேற்றைய கால் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா கேப்டன் லயோனஸ் மெஸ்ஸி கோலடிக்கவில்லை. இதன் மூலம் தொடர்ச்சியாக உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்து வந்த அவரது சாதனை முடிவுக்கு வந்துள்ளது. உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் மெஸ்ஸி கோல் அடிந்திருந்தார்.
நடப்பு உலக கோப்பையில் மெஸ்ஸி 8 கோல்கள் அடித்து, பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்வேயுடன் இணைந்து முதலிடத்தில் இருக்கிறார். எனவே, இவர்களில் யார் கோல்டன் பூட்டை கைப்பற்றுவார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. அதிக கோலடிக்கும் வீரருக்குத்தான் கோல்டன் பூட் விருது கிடைக்கும்.