சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், அவரது பயிற்சியாளர் நேஹ்பால் சிங் ஆகியோருக்கு வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஆவடி வேலம்மாள் வித்யாலயா வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு வேலம்மாள் நெக்ஸஸ் நிறுவனத்தின் தாளாளர் எம்விஎம் வேல்மோகன் தலைமை வகித்து, வித்யா ராம்ராஜ், நேஹ்பால் சிங்கை கவுரவித்தார். இருவருக்கும் வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் கார் பரிசாக வழங்கினார்.
விழாவில் தாளாளர் வேல்மோகன் பேசுகையில், “சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இவர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் விளையாட்டுத் திறமையைப் பாராட்டும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இளம் தலைமுறையினர் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஒழுக்கம், அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் உலக அளவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வித்யா ராம்ராஜின் சாதனை, அமைந்துள்ளது.
அவரது சாதனை, விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக விளங்குகிறது. எதிர்காலத்தில் அவர்கள் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகிறோம். வேலம்மாள் நெக்ஸஸ், கல்வியுடன் விளையாட்டுத் திறமைகளையும் ஊக்குவித்து, மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்புகளையும், பயிற்சி வசதிகளையும் வழங்கி வருகிறது” என்றார்.
முன்னதாக வித்யா ராம்ராஜ், அவரது தாயார் மற்றும் பயிற்சியாளர் நேஹ்பால் சிங் ஆகியோரை அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.