கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் விளையாட்டு மைதானத்தில் அர்ஜெண்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸியை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் வன்முறை, ரகளையில் ஈடுபட்டனர். மைதானத்தில் இருந்த நாற்காலிகளைத் தூக்கி வீசி சூறையாடினர்.
அர்ஜெண்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி நேற்று அதிகாலை கொல்கத்தா விமானநிலையத்துக்கு வந்தார். விமான நிலைய வளாகத்தில் அதிகாலை 2.30 மணிக்கு அவரை ரசிகர்கள் கொட்டும் பனியில் காத்திருந்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்துக்கு மெஸ்ஸி வருகை தந்தார். அவரை காண்பதற்காக ரூ 5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கி ரசிகர்கள் மைதானத்தில் குழுமியிருந்தனர். டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் மைதானத்துக்கு படையெடுத்திருந்தனர்.
மெஸ்ஸியின் வாகனம் சரியாக காலை 11.30 மணிக்கு மைதானத்துக்குள் நுழைந்தது. மெஸ்ஸியுடன் கால்பந்து வீரர்கள் லூயிஸ் சுவாரஸ், ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் வந்திருந்தனர். மூவரைப் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ், கால்பந்து கிளப் பிரதிநிதிகள் உட்பட சுமார் 80 பேர் கொண்ட ஒரு கூட்டம் மெஸ்ஸியை சூழ்ந்துகொண்டது.
அந்தக் கூட்டம் மெஸ்ஸியுடன் செல்ஃபி எடுக்கவும், கையெழுத்து வாங்கவும் முயன்றது. இதனால் மைதானத்தின் கேலரிகளில் இருந்து ரசிகர்களால் மெஸ்ஸியை சரியாகப் பார்க்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் ‘மெஸ்ஸியை காண வேண்டும்’ என்று கோஷம் எழுப்பினர். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மெஸ்ஸியை உடனடியாக மைதானத்திலிருந்து அழைத்துச் செல்ல அவர்களது பாதுகாவலர்கள் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர் மைதானத்திலிருந்து வெளியே சென்றார். டிக்கெட் வாங்கியும் மெஸ்ஸியைக் காண முடியவில்லை என்ற ஆத்திரத்தால் கோபத்துக்கு புகழ் பெற்ற கொல்கத்தா ரசிகர்கள் மைதானத்தை சூறையாடத் தொடங்கினர். அங்கிருந்த நாற்காலிகள், தடுப்புகள் அனைத்தையும் தூக்கி மைதானத்தில் எறிந்து ரகளையில் ஈடுபட்டனர்.
தண்ணீர் பாட்டில்களையும் வீசினர். மேலும், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்து தற்காலிகமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைகளை வீசி எறிந்தனர். மைதானத்தில் இருந்த சில பொருட்களுக்குத் தீ வைத்து சூறையாடினர். இதையடுத்து போலீஸார் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் மைதானமே போர்க்களமாக காட்சியளித்தது. கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டதும் சிறிது நேரத்தில் அங்கு அமைதி திரும்பியது. மைதானத்தில் ஏற்பட்ட ரகளை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து ரசிகர் ஒருவர் கூறும்போது, “மைதானத்தில் தலைவர்களும் நடிகர்களும் மட்டுமே மெஸ்ஸியை சூழ்ந்திருந்தனர். அப்படியென்றால் எங்களை ஏன் அழைத்தனர் என்று தெரியவில்லை. நாங்கள் ரூ.12 ஆயிரத்துக்கு டிக்கெட் வாங்கியுள்ளோம், ஆனால் எங்களால் அவரது முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. அவர் வெறும் 10 நிமிடங்களுக்கு மட்டுமே வந்துவிட்டு சென்றுவிட்டார். எங்களால் அவரைப் பார்க்க முடியவில்லை என்பதுதான் வருத்தம்” என்றார்.
சிலை திறப்பு: முன்னதாக கொல்கத்தா லேக் டவுனில் உள்ள பூமி ஸ்போர்ட்டிங் கிளப் அருகே மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இதை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்துவைத்தார். கையில் உலகக் கோப்பையை பிடித்திருப்பது போன்று மெஸ்ஸி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின்போது இந்தியா மற்றும் அர்ஜெண்டினாவின் கொடிகளை பிடித்தபடி ரசிகர்கள் நிகழ்ச்சியை ரசித்தனர்.
2-வதுமுறை: கொல்கத்தாவுக்கு 2-வது முறையாக லயோனல் மெஸ்ஸி வருகை தந்துள்ளார். அவர் ஏற்கெனவே 14 ஆண்டுகளுக்கு முன்பு (2011-ம் ஆண்டு)கொல்கத்தாவுக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்குழு: இந்நிலையில், கொல்கத்தா மைதானத்தில் ஏற்பட்ட பெரும் குழப்பம், ரகளை சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது: கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் இன்று ஏற்பட்ட நிர்வாகக் குறைபாடுகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளேன். தங்களுக்குப் பிடித்தமான கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியை ஒருமுறையாவது காண வேண்டும் என்பதற்காகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மைதானத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்காக, லயோனல் மெஸ்ஸியிடமும், அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
ஏற்பாட்டாளர் கைது: இந்நிலையில் சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை வந்தார் மெஸ்ஸி: முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில் நேற்று இரவு மெஸ்ஸி மும்பை வந்தார். மும்பையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார். இறுதியாக 15-ம் தேதி டெல்லியில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார் லயோனல் மெஸ்ஸி. அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்திய வருகையையொட்டி மெஸ்ஸிக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
டிக்கெட் பணம் வாபஸ்: கொல்கத்தா மைதானத்தில் ரகளை நடந்ததால் நிகழ்ச்சி ரத்தான நிலையில் ரசிகர்களுக்கான டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா, சால்ட் லேக் திடலுக்கு மெஸ்ஸி வந்தபோது, அங்கு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அடுத்ததாக மோகன் பகான் அணியின் மெஸ்ஸி ஆல் ஸ்டார் அணியும் டைமண்ட் ஹார்பர் ஆல் ஸ்டார் அணியும் விளையாட இருந்தன.
அதற்குள் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் மெஸ்ஸி பாதியிலேயே திரும்பிச் சென்றார். இந்நிலையில், டிக்கெட் விற்பனையில் மோசடி நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இது குறித்து மேற்கு வங்கத்தின் டிஎஸ்பி ராஜீவ் குமார் பேசியதாவது:
மெஸ்ஸி இங்கு வந்து, ரசிகர்களைப் பார்த்து கை அசைத்துவிட்டு, சிலரைச் சந்தித்துவிட்டு செல்வதுதான் திட்டம். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏதாவது தவறு செய்துள்ளார்களா என்பது குறித்து விசாரிக்க ஓர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது பணம் திருப்பி அளிக்கப்படுமென விழா ஏற்பாட்டாளர்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
ஜாம்பவானுடன் ஷாருக் கான் சந்திப்பு: கொல்கத்தாவில், கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸியை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவருடன் ஷாருக் கான், அவரது மகன் அப்ராம் ஆகியோர் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். மூவரும் கைகுலுக்கிக் கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்களை ஷாருக் கான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விழாக்கோலம்: மெஸ்ஸியின் வருகையை முன்னிட்டு கொல்கத்தா நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலத்தில் காட்சியளித்தது. முக்கிய சந்திப்புகளில் பதாகைகள், வரவேற்பு வளைவுகள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.
தேனிலவு ரத்து: மெஸ்ஸி இந்தியா வருவதையொட்டி அவரது தீவிர ரசிகை ஒருவர், தனது தேனிலவு பயணத்தை ரத்து செய்துவிட்டு கொல்கத்தாவுக்கு வந்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அந்தப் பெண் ரசிகை கூறியதாவது: கடந்த வெள்ளிக்கிழமை எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. எங்களது தேனிலவு திட்டத்தை ரத்து செய்துவிட்டோம். ஏனெனில், மெஸ்ஸி வருகிறார். நாங்கள் அவரை 2010 முதலில் கவனித்து வருகிறோம். அவரைப் பார்ப்பதே எங்களுக்கு ஆனந்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.