விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி நடத்த வசதிகள்: ஐஓசி-யிடம் இந்தியா விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டு வரும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், கடுமையான ஊக்கமருந்து தடுப்புச் சோதனைகள் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) அதிகாரிகளிடம் இந்தியாவின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

2036-ல் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. 2036-ல் அகமதாபாத்தில் கோடைகால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான தனது விருப்பத்தையும், அதற்கான ஏற்பாடுகளையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் (ஐஓசி) இந்தியா நேற்று விளக்கியது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்கால போட்டிகளை நடத்தும் நாடுகளைத் தேர்வு செய்யும் குழுவின் முன்பு இந்திய அதிகாரிகள் காணொலி வாயிலாக தங்களது திட்டத்தையும், விளக்கத்தையும் முன்வைத்தனர்.

இந்தக் கூட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது இந்தியாவில் உள்ள ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், அதுதொடர்பாக நடைபெற்று வரும் திட்டங்கள் ஆகியவை குறித்தும், கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊக்கமருந்து தடுப்புச் சோதனைகள் குறித்தும் ஐஓசி அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஐஓசி-யின் எதிர்கால போட்டிகளை நடத்தும் நாடுகளைத் தீர்மானிக்கும் குழுவில் கோலிண்டா கிராபர்-கிடாரோவிச் தலைமையில் மொத்தம் 9 பேர் இடம்பெற்றிருந்தனர். காணொலி மூலம் இந்தியாவின் தரப்பில் வீடியோ மூலம் ஐஓசி அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் விளக்கினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT