இயன் மோர்கன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
சென்னை: சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் கடந்த மாதம் விலகியிருந்தார். சிஎஸ்கே அணியுடன் அவரது 18 வருட பயணம் முடிவடைந்த நிலையில் புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் சிஎஸ்கே அணி களமிறங்கி உள்ளது.
பிளெமிங்கின் பயிற்சியின் கீழ் சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. மேலும் சாம்பியன்ஸ் லீக் டி 20 தொடரில் 2 முறை கோப்பையை கைப்பற்றியிருந்தது. எனினும் கடந்த 3 சீசன்களாக சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றை எட்டமுடியாமல் போனது. இதன் காரணமாக பிளெமிங், பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக நேரிட்டது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயன் மோர்கனின் பெயர் பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த சாத்தியக்கூறை முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், தனது யூடியூப் சானலில் கூறியதாவது: நான் நிச்சயமாக இயன் மோர்கனைத் தேர்ந்தெடுக்க மாட்டேன். அவர், சிறந்த பேட்ஸ்மேனாகவும், இங்கிலாந்துக்கு சிறந்த கேப்டனாகவும் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு பயிற்சியாளராக அவரை ஒரு வாய்ப்பாகக்கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது கூட அவர் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. அவர், வர்ணனையாளராக செயல்படுவதோடு நிறுத்திக் கொள்வதே சிறந்ததாக இருக்கும்.
இதேபோன்று பிரெண்டன் மெக்கல்லமை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்காமல் இருப்பதும் சிஎஸ்கே அணிக்கு நல்லதுதான். மோர்கன் மற்றும் மெக்கல்லம் ஆகிய இருவரையுமே சிஎஸ்கே அணி நிர்வாகம் வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும். மிஸ்டர் கிரிக்கெட் என அழைக்கப்படும் மைக்கேல் ஹஸ்ஸி கூடவே இருக்கும்போது சிஎஸ்கே-வுக்கு வெளியில் இருந்து யாரும் பயிற்சியாளராக தேவையில்லை.
மைக்கேல் ஹஸ்ஸியே தலைமைப் பயிற்சியாளராக தேர்வாக வேண்டும். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.