பர்மிங்ஹாம்: பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியது.
பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 133 ரன்களும், இங்கிலாந்து 453 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் 3-ம் நாளில் 449 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து 3-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி நேற்று 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பென் டக்கெட், எமிலியோ கே ஆகிய 2 பேரும் ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்தனர்.
ஆனால், 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோர்டன் காக்ஸ், கேப்டன் ஜோ ரூட் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தது. 24.2 ஓவர்களில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் குவித்து வெற்றி கண்டது.
காக்ஸ் 59 ரன்களும், ஜோ ரூட் 62 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.