காங்கோ கோல் கீப்பர் எம்பாஸி

 
விளையாட்டு

இங்கிலாந்துக்கு கடும் சவால் கொடுத்த காங்கோ: தொடரில் இருந்து வெளியேறியது | FIFA WC 2026

வேட்டையன்

அட்லாண்டா: நடப்பு ஃபிபா உலகக் கோப்பை தொடரின் ரவுண்ட் அப் 32 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் கொடுத்தது காங்கோ அணி. இருப்பினும் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த ஆட்டம் அமெரிக்காவின் அட்லாண்டாவில் இந்திய நேரப்படி புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் காங்கோ அணி கோல் பதிவு செய்து மிரட்டியது. அந்த அணிக்காக பிரையன் சிபெங்கா கோல் பதிவு செய்து அசத்தினார்.

அதற்கான பதில் கோலை பதிவு செய்யும் முயற்சியில் இங்கிலாந்து அணி தீவிரம் காட்டியது. இருப்பினும் 75-வது நிமிடம் வரை அது கைகூடவில்லை. இங்கிலாந்து அணியின் தாக்குதல் ஆட்டத்தை தடுத்து ஆடியது காங்கோ. அந்த அணியின் தடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். காங்கோ கோல் கீப்பர் எம்பாஸி அற்புத செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

ஆட்டத்தின் இறுதி விசில் ஒலிக்க 15 நிமிடங்கள் மட்டும் இருந்தது. அந்த 900 விநாடிகளை இங்கிலாந்துக்கு கோல் கொடுக்காமல் கடந்தால் காங்கோ அணி வெற்றி பெற்றிருக்கும். ஆனால், இங்கிலாந்தின் ஹாரிக்கேன் தலையால் முட்டி கோல் பதிவு செய்தார். அதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது.

அதன் பின்னர் 86-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கான வெற்றி கோலை ஹாரிக்கேனே மீண்டும் பதிவு செய்தார். காங்கோ அணியின் நான்கு வீரர்கள் சுற்றி இருந்த போதும் கேன் அடித்த அந்த ஷாட்டை அவர்களால் பார்க்க மட்டுமே முடிந்தது. மிக நேர்த்தியாக பந்தை வலைக்குள் தள்ளி இருந்தார் கேன். அதுவரை அமைதி காத்த இங்கிலாந்து அணியின் ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர்.

இருப்பினும் ஸ்டாப்பேஜ் டைமில் காங்கோ அணியின் விஸ்ஸாவுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது கோலாக மாறவில்லை. அது இந்த ஆட்டத்தின் ‘திக்… திக்...’ தருணமாக அமைந்தது. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஹாரிக்கேன் என்ற தனியொருவர் இந்த வெற்றியை இங்கிலாந்துக்கு ஈட்டி தந்தார். இந்த தோல்வி காரணமாக காங்கோ அணி வெளியேறியது. சுமார் அரை நூற்றாண்டு காலம் கடந்து அந்த அணி உலகக் கோப்பை தொடரில் இந்த முறை பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT