கொழும்பில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 19 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி இலக்கை விரட்டி 49.2 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது.
2025-ம் ஆண்டில் விளையாடிய 15 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து 11-ல் தோல்வியடைந்தது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவிடம் ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்த கையோடு, இலங்கை மண்ணிலும் அந்த அணி போராட்டத்தைச் சந்தித்து வருகிறது.
இங்கிலாந்து பேட்டிங் சரிவு: 272 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் (62) , ஜோ ரூட் (61) ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். ஒரு கட்டத்தில் 129-1 என வலுவாக இருந்த இங்கிலாந்து, திடீரென 35 ரன்கள் இடைவெளியில் 5 விக்கெட்டுகளை மளமளவென இழந்து தட்டுத் தடுமாறியது.
குறிப்பாக, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் சிக்கி டக்கெட், ரூட், ஹாரி புரூக் (6), ஜேக்கப் பெத்தேல் (15) மற்றும் சாம் கரன் (5) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசியில் ஜேமி ஓவர்டன் முக்கி முனகி முயன்று 17 பந்துகளில் 34 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) விளாசி இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடித்தர முயன்றார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பிரமோத் மதுஷன் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். இலங்கை தரப்பில் மதுஷன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை பேட்டிங்கும் பவுலிங்கும்: முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் எடுத்தார். இவர் நீண்ட காலமாக ஃபார்மில் இல்லாமல் அணியிலிருந்தே தூக்கப்பட்டவர். நேற்று இங்கிலாந்தை வைத்து தன் ஃபார்மை மீட்டெடுத்துக் கொண்டார்.
அவருக்குத் துணையாக ஜனித் லியனகே 46 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் அடில் ரஷீத் சிறப்பாகச் செயல்பட்டு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் துனித் வெல்லாலகே, ஓவர்டன் வீசிய பந்துகளில் 20 ரன்களை (மொத்தம் அந்த ஓவரில் 23 ரன்கள்) விளாசி இலங்கையின் ஸ்கோரை 271-க்கு உயர்த்தினார். மேலும், களத்தில் அவர் எடுத்த ஓர் அற்புதமான கேட்ச் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஆட்ட நாயகனாக வெல்லாலகே தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கையின் அர்த்த பூர்வமான பேட்டிங்தான் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. இங்கிலாந்து ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் தேவைப்படும் ரன் விகிதத்தைக் கடந்து செல்ல முடியவில்லை. 28-வது ஓவரிலிருந்து 40-வது ஓவருக்குள் 5 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்ததே தோல்விக்கு இட்டுச் சென்றது. மீண்டும் இங்கிலாந்து பேட்டர்களின் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிரான பலவீனம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.