அடிலெய்டு: ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் சிறந்த ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தவில்லை என்று அந்த அணியின் பயிற்சியாளரும், முன்னாள் நியூஸிலாந்து வீரருமான பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் விளையாடும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் அந்த அணி தனது சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் நேற்று கூறியதாவது: இங்கிலாந்து அணி இந்த ஆஷஸ் தொடரில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. அதுதான் உண்மை. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருபவர்கள் இங்கிலாந்து அணியினர் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், இந்த ஆஷஸ் தொடரில் அவர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது அணி நிர்வாகத்துக்கு கவலை அளிக்கிறது. இந்தத் தொடரில் போதிய ரன்களை நாங்கள் குவிக்கவில்லை என்பதை நான் அறிவேன். கடந்த சில ஆண்டுகளாக பல தொடர்களை வென்றுள்ளோம். இந்தத் தொடரில் எப்படி மீண்டு வருவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அதிக அளவில் வீரர்கள் பயிற்சி செய்தனர். ஆனாலும் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியவில்லை. அடுத்து வரும் 17-ம் தேதி அடிலெய்டில் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதற்காக நூஸா நகரிலுள்ள மைதானத்தில் பயிற்சி செய்து விட்டு செல்லவுள்ளோம். இந்தத் தொடரில் பெறும் தோல்விகளால் எனது பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்து வருமா என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அதுகுறித்து எனக்கு கவலை இல்லை. எந்த ஒரு விளையாட்டையும் உண்மையான அர்ப்பணிப்புடன் விளையாட வேண்டும் என்று விரும்புபவன் நான்.
உங்களால் முடிந்த திறமையை (இங்கிலாந்து அணி) விளையாட்டில் நீங்கள் காண்பித்துள்ளீர்கள். அப்படி இருந்தாலும் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் நாம் என்ன செய்வது? நடந்தது நடந்துவிட்டது.
இனி நடக்கப் போவது குறித்து பேசுவோம். இந்தத் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க நாங்கள் முயல்வோம். கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனாலும், வரும் போட்டிகளில் எங்களின் சிறந்த கிரிக்கெட்டை நீங்கள் பார்க்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.