பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நடப்பு இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களையும், தொடரின் நடுவே வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டதையும் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளனர்.
பில் டஃப்னெல், டேவிட் லாயிட், மைக்கேல் வாகன், அலஸ்டர் குக் ஆகியோர் ‘Stick to Cricket’ பாட்காஸ்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) அதிரடி நடவடிக்கைகளை வைத்துக் கலாய்த்துத் தள்ளினர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 2-0 என பின்னிலை கண்டது, தோற்றதை விட தோற்ற விதம் மிகவும் மோசம். ஹெடிங்லியில் இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்திலும், லார்ட்ஸில் 194 ரன்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதற்குப் பிறகு நடந்ததுதான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
மூன்றாவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பே அணியில் இருந்த ஏழு வீரர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். தலைமைப் பயிற்சியாளர் சர்ஃபராஸ் அகமது, பந்துவீச்சுப் பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். சுற்றுப்பயணத்தில் வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நடத்தை தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்நாட்டு விசாரணையையும் தொடங்கியுள்ளது.
சுற்றுப் பயணத்தின் பாதியிலேயே வீரர்களை வீட்டுக்கு அனுப்பியதைப் புரிந்துகொள்ள முடியாமல் பில் டஃப்னெல் கிண்டலாகப் பேசினார்.
“வீரர்களை உண்மையிலேயே வீட்டுக்கு அனுப்பிவிடுவது மோசமான விஷயம். அது வீரர்களுக்கு அவமானம். சுற்றுப் பயணம் முடியும் முன்பே, ‘சரி பசங்களா, நீங்க கிளம்பலாம்’ என்று சொல்வது வேற லெவல். எனது காலத்திலும் எனக்கு பலவிதமான பெயர்கள் வைத்தார்கள். ‘தி சன்’ பத்திரிகை என்னை ராக்கெட்டில் நிலவுக்கே அனுப்பிவிட்டது என்று கூட எழுதியிருக்கிறது. ஆனால் சுற்றுப் பயணம் மூன்றில் இரண்டு பங்கு முடிந்த நிலையில் வீரர்களை வீட்டுக்கு அனுப்புவது முற்றிலும் வேறு விஷயம்” என்றார்.
இதில் மைக்கேல் வாகன் ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக்காட்டினார். “பொதுவாக வீரர்கள் ஒழுக்க மீறல் போன்ற தீவிரமான காரணங்களுக்காகத்தான் சுற்றுப் பயணத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ஆனால் பாகிஸ்தானில் சில வீரர்கள் மோசமாக விளையாடியதற்காகவே வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது” என்றார்.
“பொதுவாக ஒரு வீரர் போதை விவகாரத்தில் ஏதாவது தவறு செய்தால் மட்டுமே சுற்றுப் பயணத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார். ஆனால் இவர்கள் சாதாரணமாக, சராசரியான கிரிக்கெட் விளையாடியதற்காகவே வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்” என்று வாகன் கூறினார்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவதையும் வாகன் கிண்டல் செய்தார்.
“2023-ல் சக்லைன் முஷ்டாக் தலைமைப் பயிற்சியாளர் பதவியை இழந்ததிலிருந்து, பாகிஸ்தான் ஆண்கள் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் 12 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன” என்றார் வாகன்.
உடனே அலஸ்டர் குக், “இது வாட்ஃபோர்டு கால்பந்து அணியின் பயிற்சியாளர்கள் மாற்ற எண்ணிக்கையைவிட அதிகம்!” என்று கிண்டலடித்தார்.
மேலும், பாகிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்து முன்பு தான் கூறிய கருத்து 24 மணி நேரத்துக்குள்ளேயே பழையதாகிவிட்டதையும் குக் நகைச்சுவையாகச் சுட்டிக்காட்டினார்.
“இந்த நிகழ்ச்சியில், ‘இந்த சுற்றுப் பயணத்தில் எந்தக் குழப்பமும் இல்லை; அவர்கள் மோசமாகத்தான் விளையாடுகிறார்கள்’ என்று நான் சொன்னேனா? அதைச் சொன்ன 24 மணி நேரத்துக்குள்ளேயே ஏழு பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்!” என்று குக் சிரித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ஆகிப் ஜாவெத் குறித்துப் பேசும்போது டேவிட் லாயிட் இன்னும் கடுமையாக விமர்சித்தார். முன்னாள் பாகிஸ்தான் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பியுடன் ஏற்பட்ட பொதுவெளி மோதலைக் குறிப்பிட்ட அவர், “இது நாட்டுக்கே முழுமையான அவமானம்” என்று சாடினார்.
இதையெல்லாம் விட, பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மன்னரைச் சந்தித்த சம்பவம்தான் நிகழ்ச்சியின் மிகப் பெரிய நகைச்சுவையாக மாறியது.
சுற்றுப் பயணத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் அணியினர் மன்னர் சார்லஸைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் நேரம்தான் முன்னாள் இங்கிலாந்து வீரர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது.
“அவர்கள் மன்னர் சார்லஸைச் சந்தித்தார்களே, இல்லையா?” என்று ஒருவர் கேட்க, உடனே கிண்டல் தொடங்கியது.
“அனைவரும் வரிசையாக நிற்கிறார்கள்; அதே நேரத்தில் உங்களில் சிலர் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.”
“ஆனால் வீட்டுக்குப் போகும் முன், மன்னரைச் சந்தித்துவிட்டுப் போக முடியுமா?”
இதற்கு மேல் கற்பனையை ஓடவிட்ட இங்கிலாந்து அணியின் முன்னாள்கள், மன்னர் சார்லஸ் வீரர்களிடம் என்ன கூறியிருப்பார் என்றும் நகைச்சுவையாகச் சொன்னார்கள்.
“சார்லஸ் கீழே நடந்து வந்து, ‘நீங்கள்தானா வீட்டுக்குப் போகிறவர்? என்ன தப்பு செய்தீர்கள்?’ என்று கேட்டிருப்பார்!” என்று ஒருவர் கிண்டலடித்தார்.
இந்த அளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நிலை நகைச்சுவையாக மாறிவிட்டதை அந்த பாட்காஸ்ட் உணர்த்தியது.
தொடரின் முடிவு என்னவாக இருந்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணம் மட்டும் கிரிக்கெட் போட்டிகளைவிட, வீரர்கள் வெளியேற்றம், பயிற்சியாளர் மாற்றம், நிர்வாகக் குழப்பம் என ஒரு முழுநீள நகைச்சுவைத் தொடராகவே மாறிவிட்டது.