லாகூர்: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 386 ரன்கள் குவித்தது. தனது 6-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான பென் டக்கெட் 132 பந்துகளில், 24 பவுண்டரிகளுடன் 167 ரன்கள் குவித்த நிலையில் இஷான் மலிங்கா பந்தில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான டாம் பேன்டன் 75 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹாரி புரூக் 44, ஜோர்டான் காக்ஸ் 43, வில் ஜேக்ஸ் 30, சாம் கரண் 21 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 387 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 45.1 ஓவர்களில் 331 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பவன் ரத்னாயகே 118, குஷால் மெண்டிஸ் 89 ரன்கள் விளாசினர்.
55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்திருந்தது. நாளை (31-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன.