விளையாட்டு

பனாமாவை வீழ்த்தி இங்கிலாந்தும், போர்ச்சுகலுடன் டிரா செய்து கொலம்பியாவும் முதலிடம் | FIFA WC 2026

ஆர்.முத்துக்குமார்

ஃபிபா உலகக் கோப்பை பிரிவு ‘எல்’ ஆட்டத்தில் பனாமாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து, குழுவில் முதலிடத்தை கைப்பற்றி நாக்-அவுட் சுற்றுக்குள் நம்பிக்கையுடன் முன்னேறியது.

மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜூட் பெல்லிங்கம் அட்டகாசமான ஒரு கோலுடன் 2-வது கோலுக்கு உறுதுணையாக இருந்து அசிஸ்ட் செய்து ஆட்டநாயகனாக திகழ்ந்தார்.

அதேபோல் ‘கே’ பிரிவில் கொலம்பியா - போர்ச்சுகல் ஹெவிவெயிட் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் கொலம்பியா அணி கடுமையாக ஆடி, போர்ச்சுக்கல்லுடன் 0-0 என்று டிரா செய்தது.

முதல் பாதியில் பந்தை அதிகமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், இறுதிக்கட்டத்தில் தாக்குதலை முடிக்க இங்கிலாந்து தடுமாறியது. மறுமுனையில் பனாமா எதிர்த்தாக்குதல்களின் மூலம் ஆபத்தான தருணங்களை உருவாக்கி இங்கிலாந்து பாதுகாப்புக்கு சவால் விட்டது. அதே நேரத்தில் மற்றொரு போட்டியில் குரேஷியா அணி கானாவுக்கு எதிராக முன்னிலையில் இருந்ததால், குழு முதலிடத்தைப் பெற இங்கிலாந்து வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் போக்கையே மாற்றியவர் பெல்லிங்கம். 62-வது நிமிடத்தில் புகாயோ சாக்கா எடுத்த கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அவர், அருகிலிருந்து பந்தை வலையில் தள்ளி இங்கிலாந்துக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

அந்த முன்னிலை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பெல்லிங்கம் அளித்த துல்லியமான கிராஸை கோல் அருகே எம்பி தலையால் முட்டி ஹாரிகேன் கோலாக மாற்றினார். இது ஹாரிகேனின் 11-வது உலகக் கோப்பை கோல் ஆகும். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்து, நீண்டகாலமாக நிலைத்து இருந்த கேரி லினேகரின் சாதனையை முறியடித்தார்.

அதன்பிறகு ஆட்டத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்த இங்கிலாந்து, பனாமாவுக்கு மீளும் வாய்ப்பே வழங்காமல் வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றியுடன் இங்கிலாந்து அணி ‘எல்’ குழுவில் முதலிடத்தைப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நாக்-அவுட் சுற்றில் இங்கிலாந்து அணி காங்கோ அணியை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்தின் வெற்றியில் கேன் சாதனை படைத்திருந்தாலும், ஆட்டத்தின் உண்மையான கதாநாயகன் பெல்லிங்கம்தான். முக்கியமான தருணங்களில் தனது தரத்தை வெளிப்படுத்திய அவர், இங்கிலாந்தை குழு முதலிடத்துக்கு அழைத்துச் சென்றார்.

முதல் சுற்று முடிவில் ‘எல்’ பிரிவின் இறுதி நிலவரம்:

>> இங்கிலாந்து - 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள்

>> குரேஷியா - 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள்

>> கானா - 3 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ட்ராவுடன் 4 புள்ளிகள்

>> பனாமா - வெளியேற்றம்

‘கே’ பிரிவில் கொலம்பியா முதலிடம்; போர்ச்சுகல் 2-வது இடம்

போர்ச்சுகலுடன் கோல் ஏதுமின்றி (0-0) டிரா செய்த கொலம்பியா, உலகக் கோப்பையின் முதல் சுற்றை 'கே' பிரிவில் முதலிட அணியாக நிறைவு செய்தது.

இந்தப் போட்டிக்கு முன்பே இரு அணிகளும் நாக்-அவுட் சுற்றுக்கான தகுதியை உறுதி செய்திருந்தன. எனவே அடுத்த சுற்றில் யாரை எதிர்கொள்ளப் போகின்றன என்பது மட்டுமே இந்தப் போட்டி மூலம் தீர்மானிக்கப்பட வேண்டியிருந்தது.

‘கே’ பிரிவில் முதலிடம் பிடித்த கொலம்பியா, சனிக்கிழமை அன்று குரேஷியாவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த கானா அணியை நாக்-அவுட் சுற்றில் சந்திக்கிறது.

48 அணிகள் பங்கேற்கும் விரிவாக்கப்பட்ட உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்திற்கான முக்கிய போட்டியாளர்களில் ஒன்றாகக் கருதப்பட்ட போர்ச்சுக்கல் அணி, ‘கே’ பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெற்று குரோஷியாவை எதிர்கொள்ள உள்ளது.

போட்டி முழுவதும் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் பாதியில் போர்ச்சுகலின் புரூனோ ஃபெர்னாண்டஸ் கோல் அடிக்க நெருங்கியபோதும், கொலம்பியாவின் கோல்கீப்பர் கேமிலோ வார்கஸ் சிறப்பாக தடுத்து நிறுத்தினார்.

மறுபுறம், போர்ச்சுகல் கோல்கீப்பர் டியாகோ கோஸ்டா ஆறு முக்கிய சேவ்களை மேற்கொண்டார். இது, போர்ச்சுகலின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் செய்த சேவ்களின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகமாகும்.

முதல் சுற்று முடிவில் ‘கே’ பிரிவின் இறுதி நிலவரம்:

>> கொலம்பியா - 7 புள்ளிகள்

>> போர்ச்சுகல் - 5 புள்ளிகள்

>> காங்கோ - 4 புள்ளிகள்

>> உஸ்பெகிஸ்தான் - 0

ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட்)

>> காங்கோ - இங்கிலாந்து

>> கொலம்பியா - கானா

>> போர்ச்சுகல் - குரேஷியா

SCROLL FOR NEXT