மெல்பர்ன்: ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து ஆஷஸ் தொடர் டெஸ்ட் போட்டியில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி வெற்றியைச் சுவைத்துள்ளது.
இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி கடந்த 26-ம் தேதி தொடங்கியது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் நடைபெறும் போட்டி என்பதால் இது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக அமைந்தது.
முதலில் விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சால் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மைக்கேல் நேசர் மட்டும் அதிகபட்சமாக 35 ரன்கள் சேர்த்தார்.
இதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்தது. அந்த அணி 110 ரன்களிலேயே சுருண்டது. இதையடுத்து 42 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று 2-ம் நாள் ஆட்டத்தை டிராவிஸ் ஹெட் 0 ரன்களுடனும், ஸ்காட் போலண்ட் 4 ரன்களுடனும் தொடங்கினர். ஆனால், முதல் நாளைப் போலவே இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சில் அனல் பறந்தது. கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால், ஆஸ்திரேலிய வீரர்கள் மைதானத்துக்கு வருவதும், ஆட்டமிழந்து பெவிலியன் செல்வதுமாக இருந்தனர். ஸ்காட் போலண்ட் 6, ஜேக் வெதரால்ட் 5, மார்னஸ் லபுஷேன் 8, உஸ்மான் கவாஜா 0, அலெக்ஸ் கேரி 4, கிரீன் 19, நேசர் 0, ஸ்டார்க் 0, ஜை ரிச்சர்ட்சன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். ஸ்டீவன் ஸ்மித் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 34.3 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவின் 2-ம் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
கார்ஸ் 4, ஸ்டோக்ஸ் 3, ஜோஷ் டங் 2, கஸ் அட்கின்சன் ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர். இதைத் தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-ம் இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். இதனால் இங்கிலாந்து அணிக்கு வலுவான தொடக்க ஸ்கோர் கிடைத்தது. கிராவ்லி 37 ரன்களும், டக்கெட் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த பிரைடன் கார்ஸ் 6, ஜேக்கப் பெத்தேல் 40, ஜோ ரூட் 15, பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹாரி புரூக் வழக்கம் போலவே அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 18 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். மறுமுனையில் ஜேமி ஸ்மித் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 32.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 சேர்த்து இங்கிலாந்து அணி வெற்றி கண்டது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ரிச்சர்ட்சன், ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி கண்டது. ஆட்டநாயகனாக இங்கிலாந்து வீரர் ஜோஷ் டங் தேர்வு செய்யப்பட்டார். 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அவர் 7 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.
ஆஸ்திரேலிய மண்ணில்.. - இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி பெறும் முதல் வெற்றியாகும் இது. மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிட்னியில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. 14 ஆண்டுகள், அதாவது 5,468 நாட்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.
2 நாட்களிலேயே.. மேலும் இந்த டெஸ்ட் போட்டியானது முதல் 2 நாட்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது. முதல் நாளில் 20 விக்கெட்களும், 2-ம் நாளில் 16 விக்கெட்களும் சரிந்தன.
கடைசி டெஸ்ட்: இந்தத் தொடரின் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி மாதம் 4-ம் தேதி சிட்னியில் தொடங்கவுள்ளது.
அதிக கேட்ச் ஸ்மித் சாதனை: டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்கள் பிடித்தவர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 2 கேட்ச்கள் பிடித்தார். இதையடுத்து டெஸ்ட் போட்டிகளில் அவர் பிடித்த கேட்ச்களின் எண்ணிக்கை 212 -ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் டெஸ்டில் அதிக கேட்ச் செய்த வீரர்களின் வரிசையில் 2-வது இடத்தில் இருந்த இந்தியாவின் ராகுல் திராவிட்டை (210 கேட்ச்) பின்னுக்குத் தள்ளினார் ஸ்மித். இந்த வரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (214 கேட்ச்கள்) முதல் இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் வரிசையிலிருந்த ஆலன் பார்டரை பின்னுக்குத் தள்ளி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆலன் பார்டர், இங்கிலாந்துக்கு எதிராக 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,548 ரன்கள் குவித்து 2-ம் இடத்தில் இருந்தார். நேற்றைய போட்டியின் முடிவில் ஸ்டீவன் ஸ்மித் மொத்தம் 40 போட்டிகளில் விளையாடி 3,553 ரன்கள் குவித்து ஆலன் பார்டரை முந்தியுள்ளார்.
பாக்ஸிங் டே டெஸ்டில் 3 தோல்வி: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தனது 3-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது. இதுவரை 15 பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி, இதுவரை 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வியும், 2 போட்டிகளை டிராவும் செய்துள்ளது.
குறைந்த பந்துகள்: மேலும், குறைந்த பந்துகளில் முடிவடைந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி வரிசையில் மெல்பர்ன் டெஸ்ட் போட்டி 4-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போட்டி 852 பந்துகளில் முடிவுக்கு வந்துள்ளது. 1888-ல் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற போட்டி 788 பந்துகளிலும், 1888-ல்
லார்ட்ஸில் நடைபெற்ற போட்டியில் 792 பந்துகளிலும், 2025-ல் பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் 847 பந்துகளிலும் போட்டி முடிவுக்கு வந்துள்ளது.
2 நாளில் முடிவுக்கு வந்த ஆஷஸ் போட்டிகள்: இதுவரை ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 7 போட்டிகள் மட்டுமே 2 நாளில் முடிவுக்கு வந்துள்ளன. 1888-ல் லார்ட்ஸில் நடைபெற்ற போட்டியிலும், 1888-ல் தி ஓவலில் நடைபெற்ற போட்டியிலும், 1888-ல்
மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியிலும், 1890-ல் தி ஓவலில் நடைபெற்ற போட்டியிலும், 1921-ல் நாட்டிங்ஹாமில் நடைபெற்ற போட்டியிலும், 2025-ல் பெர்த்தில் நடைபெற்ற போட்டியிலும், தற்போது மெல்பர்னில் நடைபெற்ற போட்டியிலும் ஆட்டம் 2 நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது.