சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் வாயிலாக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-1 என தன்வசப்படுத்தியது.
சிட்னியில் நேற்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பில் சால்ட் 7, அனியூரின் டொனால்டு 7, கேப்டன் ஹாரி புரூக் 9, டாம் பேன்டன் 3, ஜோர்டான் காக்ஸ் 23 ரன்களில் நடையை கட்டினர்.
பொறுமையாக விளையாடிய ஜேம்ஸ் கோல்ஸ் 29 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 33 ரன்களில் வெளியேறினார். இறுதிக்கட்ட ஓவர்களில் சேம் கரண் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்களும், ஜேமி ஓவர்டன் 9 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் 20 ரன்களும், லியாம் டாவ்சன் 14 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்களும் விளாசினர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்பென்சன் ஜான்சன், ரிலே மெரிடித் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 182 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. எனினும் கேப்டன் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி சதம் அடித்து வெற்றிக்காக போராடினார். 19 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.
ஹென்றி குரோகோம்ப் வீசிய கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 3 பந்துகளிலும் தலா ஒரு ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட நிலையில் 4-வது பந்தில் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தார். அவர் 57 பந்துகளை எதிர்கொண்டு 9 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் விளாசினார்.
5-வது பந்தில் ஜோயல் டேவிஸ், ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆனார். கடைசி பந்தில் ஆடம் ஸம்பா ஒரு ரன் மட்டுமே சேர்த்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஹென்றி குரோகோம்ப் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 3-1 என கைப்பற்றியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது.