கிரிக்கெட்டை எப்படி பணமழை கொட்டும் ஆட்டமாக மாற்றுவது என்பதை ஐபிஎல் உலகிற்குக் கற்றுக் கொடுக்க அதையே அதன் மரபான வடிவங்களிலும் புகுத்தும் திட்டம் ஐசிசியிலும் அனைத்து கிரிக்கெட் வாரியங்களிலும் புகுந்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை அதிகாரி டாட் கிரீன்பர்க், இந்தியாவில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை நடத்தும் முயற்சியை முன்மொழிந்துள்ளார்.
பிபிசி ‘ஸ்டம்ப்டு’ பாட்காஸ்டில் கிரீன்பர்க் இது தொடர்பாகக் கூறும்போது, “அனைத்து வாய்ப்புகளையும் நாம் திறந்து வைத்திருக்க வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ-யுடனான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் உறவு வலுவாக உள்ளது.
ஆகவே இங்கிலாந்து-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளை இந்தியாவில் நடத்தும் வாய்ப்பையும் நாம் பரிசீலிக்கலாம். இப்போதைக்கு நாங்கள் அப்படி ஒன்றைத் திட்டமிடவில்லை, ஆனால் வாய்ப்புகளை நாம் திறந்து வைத்திருப்பதில் தவறில்லை, பரிசீலனையில் வைத்திருக்கலாம்.
எங்கள் அணி, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் மிகவும் வலுவாகவே இருப்பதாக நான் கருதுகிறேன்; உலகின் பிற பகுதிகளில் நிலவும் போக்குக்கு இது ஒரு விதிவிலக்காகவே உள்ளது. எனவே, இதைத் தொடர்ந்து வளர்த்து வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.
உலகளாவிய கிரிக்கெட்டில் நம் அனைவருக்கும் உள்ள சவால் என்னவென்றால், ஒரு கால அட்டவணையில் 365 நாட்கள் மட்டுமே உள்ளன; ஆனால், நாங்கள் விரும்பும் போட்டிகளை நடத்த வேண்டுமானால், கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் தேவைப்படலாம்." என்றார் கிரீன்பர்க்.
ஒரு டெஸ்ட் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகிய இரு அமைப்புகளின் ஒப்புதலும், பிசிசிஐ-யின் ஒத்துழைப்பும் தேவைப்படும். இருப்பினும், 'ஃபிரான்சைஸ்' (franchise) கிரிக்கெட்டின் தொடர்ச்சியான வளர்ச்சியையும், ஐபிஎல் தொடர் மற்றும் 'தி ஹண்ட்ரட்' (The Hundred) உள்ளிட்ட பிற நாடுகளில் விரிவடையும் அதன் கட்டமைப்பு ஆகியவற்றுடன் கூடிய - நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதிக்கத்தையும் கருத்தில் கொண்டு, இத்தகைய நடவடிக்கை நவீன கிரிக்கெட் சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டின் இடத்தை மேலும் வலுப்படுத்தும் என்று கிரீன்பெர்க் நம்புகிறார்.
அதேவேளையில், ஏற்கனவே மிகவும் நெருக்கடியான போட்டி அட்டவணையில் இதற்கான கால அவகாசத்தை அல்லது இடத்தைக் கண்டறிவதில் உள்ள சிரமத்தையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.